Asianet News TamilAsianet News Tamil

IPL 2022 முடிந்தது டீல்.. பஞ்சாப் கிங்ஸ்லிருந்து விலகி புதிய அணியின் கேப்டன் ஆகிறார் KL Rahul..!

ஐபிஎல் 15வது சீசனில் கேஎல் ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து விலகி புதிய அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

kl rahul will may lead lucknow franchise in ipl 2022
Author
Chennai, First Published Nov 25, 2021, 5:27 PM IST

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் கூடுதலாக ஆடவுள்ளன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது.

அனைத்து அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் உட்பட பல பெரிய வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ளதால், இந்த மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு அணியும் எந்த 4 வீரர்களை தக்கவைக்கின்றன, எந்தெந்த பெரிய வீரர்கள் அணி மாறுகின்றனர் என்பன குறித்த தகவல் வெளியாகிவருகின்றன. அந்தவகையில், நல்ல ஃபார்மில் மிகச்சிறப்பாக ஆடிவரும் பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் அடுத்த சீசனில் எந்த அணியில் ஆடப்போகிறார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேஎல் ராகுல் ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிவருவதுடன், கேப்டன்சியும் நன்றாக செய்துவருகிறார். பஞ்சாப் கிங்ஸ் அணியை கடந்த சில சீசன்களாக ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் தனி ஒருவனாக தூக்கி நிறுத்திவருகிறார். இந்தியாவிற்காகவும் அதிரடியாக ஆடிவரும் ராகுல், தற்போது செம ஃபார்மில் ஆடிவருகிறார். கடந்த சீசனில் 626 ரன்களை குவித்தார். கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த ருதுராஜ் கெய்க்வாட்டை விட வெறும் 9 ரன்களே ராகுல் குறைவாக அடித்திருந்தார். ருதுராஜ் சார்ந்திருந்த சிஎஸ்கே அணி ஃபைனல் வரை ஆடியது. ஆனால் ராகுல் ஆடிய பஞ்சாப் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அதனால் ருதுராஜை விட 2 போட்டிகள் குறைவாக ஆடினார் ராகுல். அப்படியிருந்தும், ருதுராஜை விட வெறும் 9 ரன்கள் மட்டுமே குறைவாக அடித்திருந்தார் ராகுல். ஒருவேளை பஞ்சாப் அணி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றிருந்தால், கடந்த சீசனின் அதிகபட்ச  ரன் ஸ்கோரராக ராகுல் தான் இருந்திருப்பார்.

அதற்கு முந்தைய ஐபிஎல் 13வது சீசனில்(2020) 670 ரன்களை குவித்த ராகுல் தான் ஆரஞ்சு கேப்பை வென்றார். அதற்கு முந்தைய 2019 சீசனில் 593 ரன்களை குவித்து, வார்னருக்கு அடுத்து அதிக ரன்களை குவித்த வீரராக திகழ்ந்தார் ராகுல். இப்படியாக கடந்த சில சீசன்களாகவே டாப் 3 ரன் ஸ்கோரர்களில் ஒருவராக ராகுல் திகழ்ந்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறப்பாக ஆடிவருகிறார்.

எனவே அவர் அடுத்த சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.20 கோடிக்கு மேல் விலைபோவார் என ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியிருந்தார்.

ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்து வருகின்றனர். புதிதாக களமிறங்கும் 2 அணிகள், ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அந்தவகையில் புதிய அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களுடன் டீலிங்கை முடித்துவருகின்றனர்.

அந்தவகையில், புதிய அணியான லக்னோ அணி கேஎல் ராகுலை எடுத்து அவரை கேப்டனாக நியமிக்க தீர்மானித்தது. அதன்படி, அந்த அணி உரிமையாளர்கள் கேஎல் ராகுலை தொடர்புகொண்டு டீலிங்கை முடித்துவிட்டதாகவும், கேஎல் ராகுல் பஞ்சாப் அணியை விட்டு வெளியேறி, லக்னோ அணிக்கு ஆட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios