இந்திய அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. அந்தவகையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுவருகிறது. உலக கோப்பைக்கான தயாரிப்பில் இந்திய அணி இருக்கும் நிலையில், தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார் தவான். 

வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் மந்தமாக ஆடி படுமோசமாக சொதப்பிய தவான், வங்கதேசத்துக்கு எதிராகவும் மோசமாக ஆடினார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 42 பந்துகளில் 41 ரன்கள் அடித்து பயனற்ற இன்னிங்ஸை ஆடிவிட்டுச்சென்றார். அணியில் தனது இடத்தை தக்கவைக்க, அடுத்த இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தவான், அவற்றிலும் சொதப்பினார். 

அதன்பின்னர் சையத் முஷ்டாக் அலி தொடரில் டெல்லி அணியில் ஆடிய தவான், அதிலும் சரியாக ஆடவில்லை. சையத் முஷ்டாக் அலி தொடரில், உள்நாட்டு பவுலர்களை எதிர்கொள்ளும்போதே, பந்துக்கு சமமான ரன் மட்டுமே அடித்தார். 

தவான் மந்தமாக ஆடிவருவதால், டி20 போட்டிகளில் ரோஹித் சர்மாவுடன் ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் ஏற்கனவே எழுந்துவிட்டன. கவாஸ்கர் உள்ளிட்ட சில வீரர்கள் இந்த கருத்தை தெரிவித்திருந்தனர். 

ஏற்கனவே அணியில் அவரது இடம் அபாயத்தில் இருக்கும் நிலையில், சையத் முஷ்டாக் அலி தொடரில் அவருக்கு காயம் ஏற்பட்டதால், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த தொடரில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக இறங்க வாய்ப்பில்லை என்பதால், ராகுல் தான் இறக்கப்படுவார். ராகுல், ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவதை காண ஆவலாக இருப்பதாக விவிஎஸ் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.