கேஎல் ராகுல் நல்ல பேட்டிங் டெக்னிக்கையும் அபாரமான திறமையையும் கொண்ட வீரர் என்று பல முன்னாள் ஜாம்பவான்களால், அவரது கெரியரின் தொடக்க காலத்திலேயே பேசப்பட்டவர். டெஸ்ட் அணியிலும் இளம் வயதிலேயே தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பை பெற்ற அவர், தொடர்ச்சியாக சொதப்பியதால், அவரது இடம் ரோஹித்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. 

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பியதால் வாய்ப்பை இழந்த கேஎல் ராகுல், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறார். ஆனாலும் முதன்மை தொடக்க வீரரான தவான் இருப்பதால், ராகுலுக்கு தொடர்ச்சியாக ஆடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ரோஹித் அல்லது தவான் இருவரில் ஒருவர் ஆடவில்லை என்றால்தான் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. 

தவான் அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவரும் நிலையில், அவரை ஓரங்கட்டிவிட்டு, டி20 உலக கோப்பையில் ராகுலை தொடக்க வீரராக இறக்கும் வகையில், இப்போதிலிருந்தே தயார்படுத்த வேண்டும் என்ற குரல் பரவலாக எழுந்தது. அதற்கேற்றாற்போலவே சையத் முஷ்டாக் அலி தொடரின்போது காயமடைந்ததால் தவான், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதனால் தொடக்க வீரராக ஆடும் வாய்ப்பை பெற்ற ராகுல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தனது கிளாசான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 208 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்துவிட்டது. ஆனால் கேப்டன் கோலியுடன் இணைந்து அதிரடியாக ஆடி ஸ்கோர் செய்தார் ராகுல். ராகுல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 40 பந்தில் 62 ரன்களை குவித்து, கோலியுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்து கொடுத்துவிட்டு ஆட்டமிழந்தார் ராகுல். கோலி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக திகழ்ந்தாலும், ராகுலின் பங்களிப்பும் மிக முக்கியமானது. 

அந்த போட்டிக்கு பின்னர் பேசிய ராகுல், டி20 உலக கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. அதனால் உலக கோப்பை அணியில் இடம்பெறுவதை பற்றியெல்லாம் நான் பெரிதாக யோசிக்கவில்லை. இரண்டு தொடர்களுக்கு பிறகு மீண்டும் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பை பெற்றேன். எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆட வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். 

நான் நன்றாக செட்டில் ஆகிவிட்டால், எந்த இலக்கையும் விரட்டிவிட முடியும் என்பது எனக்கு நன்றாக தெரியும். அணியில் ஒரு தொடக்க வீரராக என்னுடைய ரோல் என்பது சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது தான். நான் அதை செய்துவிட்டால், பின்னால் வரும் வீரர்கள் கண்டிப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் ஃபினிஷர் வேலையை செய்துவிடுவார்கள். எந்த விதமான போட்டியாக இருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக நல்ல ஸ்கோர் செய்வது மட்டுமே தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அப்பதான் அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுக்க முடியும் என்று ராகுல் பேசினார்.