தென்னாப்பிரிகாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார் கேஎல் ராகுல்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் - மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். மயன்க் அகர்வால் 60 ரன்னில் லுங்கி இங்கிடியின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த புஜாரா முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின்னர் கேஎல் ராகுலுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி சிறப்பாக தொடங்கினார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறிவிட்டார். 3வது விக்கெட்டுக்கு ராகுலும் கோலியும் இணைந்து 80 ரன்களை சேர்த்தனர். கோலி 35 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார்.
அஜிங்க்யா ரஹானே அண்மைக்காலமாக சரியாக ஆடாதபோதிலும், அவரது திறமை, அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளிக்கப்பட்டது. அதை நன்றாக பயன்படுத்தி நிதானமாகவும், அதேவேளையில் அடித்தும் ஆடுகிறார் ரஹானே. ராகுலுடன் இணைந்து அவர் நன்றாக ஆடிவருகிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடிவரும் கேஎல் ராகுல் சதமடித்தார்.
கேஎல் ராகுலும் ரஹானேவும் இணைந்து நன்றாக ஆடிவருகின்றனர். இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 250 ரன்களை கடந்து ஆடிவருகிறது. ராகுல் மற்றும் ரஹானே ஆகிய இருவரும் களத்தில் நன்றாக செட்டில் ஆகியிருப்பதால், இந்திய அணி பெரிய ஸ்கோரை கண்டிப்பாக அடிக்கும்.
