உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடரில், கர்நாடகா மற்றும் கேரளா அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் தேவ்தத் படிக்கல் மற்றும் கிருஷ்ணமூர்த்தி சித்தார்த் ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் ராகுலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 

கேஎல் ராகுலும் மனீஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து சொதப்பியதால், டெஸ்ட் அணியில் தனது இடத்தை இழந்துள்ள ராகுல், தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதை நன்கு உணர்ந்து, இந்த போட்டியில் சிறப்பாக ஆடினார். 

ராகுல் ஒருமுனையில் சிறப்பாக ஆட, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய மனீஷ் பாண்டே அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராகுல், சதம் அடித்து அசத்தினார். சதமடித்ததும் ஆட்டமிழந்துவிடாமல், அதன்பின்னர் 30 ரன்களை சேர்த்துவிட்டுத்தான் ஆட்டமிழந்தர். 122 பந்துகளில் ராகுல் 131 ரன்களை குவித்தார். பின்வரிசையில் ஷ்ரேயாஸ் கோபால் நன்றாக ஆடி தன் பங்கிற்கு 31 ரன்களை சேர்த்து கொடுக்க, 49.5 ஓவரில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கர்நாடக அணி. 

295 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய கேரள அணியின் தொடக்க வீரர் வினூப் மனோகரன், ஒரு பந்து கூட பேட்டிங் ஆடாமல் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான விஷ்ணு வினோத்துடன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், நன்றாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 67 ரன்களில் ரன் அவுட்டானார். 

இதையடுத்து விஷ்ணு வினோத்துடன் கேப்டன் ராபின் உத்தப்பா ஜோடி சேர்ந்தார். ஆனால் அவர் வெறும் 13 ரன்களுக்கு நடையை கட்ட, அவரை தொடர்ந்து சச்சின் பேபி, சல்மான் நசீர், முகமது அசாருதீன் என அடுத்தடுத்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விஷ்ணு வினோத் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆட, கேரள அணி மறுமுனையில் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் அடுத்தடுத்து இழந்தது. அதனால் பார்ட்னர்ஷிப்பே அமையவில்லை. 

சிறப்பாக ஆடிய விஷ்ணு வினோத் சதமடித்து அசத்தினார். ஆனாலும் அவரது சதத்திற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. 46வது ஓவரில் விஷ்ணு வினோத் 104 ரன்களில் 9வது விக்கெட்டாக அவுட்டாக, அடுத்த ஓவரிலேயே ஆட்டம் முடிந்துவிட்டது. 234 ரன்களில் கேரள அணி ஆல் அவுட்டானதையடுத்து, 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.