காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதையடுத்து, கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் சிறிது காலம் தடை பெற்றனர். தடைக்கு பின்னர் இருவருமே மிக வலிமையுடன் வேற லெவலில் கம்பேக் கொடுத்தனர். 

அதன்பின்னர் உலக கோப்பையில் ஆடிய கேஎல் ராகுல், உலக கோப்பைக்கு பின்னர் நடந்த அனைத்து தொடர்களிலும் அபாரமாக ஆடியதையடுத்து, இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரிலும் டி20 போட்டிகளில், ரோஹித்துடன் இணைந்து தொடக்க வீரராகவும் அசத்தலாக ஆடிவருகிறார் ராகுல்.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி மேற்கொண்ட நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அருமையாக ஆடினார் கேஎல் ராகுல். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட ராகுல், டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார். 

இந்நிலையில், தடைக்கு பிறகு தனது பேட்டிங் அணுகுமுறையிலும் தனது மனநிலையிலும் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மா தனக்கு அளித்த ஆதரவு குறித்தெல்லாம் மனம் திறந்து பேசியுள்ளார் கேஎல் ராகுல். தனது பேட்டிங் அணுகுமுறை மற்றும் மனநிலையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து ஏற்கனவே நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம்.  சுயநலமா ஆடுனேன்; தோற்றுப்போனேன்.. டீமுக்காக ஆடுனேன்; ஜெயிச்சுட்டேன்..! இந்திய வீரர் ஓபன் டாக்

இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து ராகுல் பேசியதை பார்ப்போம். ரோஹித் குறித்து பேசிய கேஎல் ராகுல், நான் ரோஹித் சர்மாவின் பேட்டிங்கிற்கு தீவிர ரசிகன். அவருடன் கடந்த சில ஆண்டுகளாக ஆடிவருகிறேன். சச்சின் டெண்டுல்கர் ஆடுவதை எப்படி மெய்மறந்து பார்ப்போம்... அப்படித்தான் ரோஹித்தும். என் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்து, அணியின் சீனியர் வீரராக அவர், எப்போதுமே எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத ஒரு இளம் வீரருக்கு, சீனியர் வீரர் ஆதரவளிக்கும்போது, அந்த இளம் வீரரின் நம்பிக்கை அதிகரிக்கும். அந்தவகையில், எனக்கு ரோஹித் மிகப்பெரிய அளவில் ஆதரவளித்திருக்கிறார் என்று தெரிவித்தார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரரான இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த வீரர் ரோஹித்தா கோலியா என்ற விவாதமும் நடந்துவரும் வேளையில், ரோஹித்தின் பேட்டிங்கை உயர்த்தி பேசியிருக்கிறார் கேஎல் ராகுல்.