கேஎல் ராகுல் இந்திய அணியின் எதிர்காலமாக பார்க்கப்படுகிறார். மிகவும் ஸ்டைலிஷான பேட்ஸ்மேனான ராகுல், பிரயன் லாரா உள்ளிட்ட பல மிகப்பெரிய ஜாம்பவான்களே ரசிக்கும் வீரராக திகழ்கிறார். 

கேஎல் ராகுல், 2019 உலக கோப்பை அணியில் இடம்பிடித்திருந்தார். உலக கோப்பையில் நன்றாக ஆடினார். உலக கோப்பைக்கு பின்னர் நடந்த அனைத்து தொடர்களிலும் அபாரமாக ஆடி இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்ட ராகுல், நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில், அருமையாக ஆடினார். ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரிலும், டி20 போட்டிகளில் தொடக்க வீரராகவும் அசத்தலாக ஆடினார். 

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட கேஎல் ராகுல், டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார். இந்நிலையில், காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சையால் தடைபெற்ற கேஎல் ராகுல், அதன்பின்னர் தனது பேட்டிங் அணுகுமுறையை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கேஎல் ராகுல், அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருகிறேன் என்றால், அதற்கு எனது சிந்தனையையும் அணுகுமுறையையும் மாற்றியதுதான் காரணம். முன்பெல்லாம் நான் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று சுயநலமாக ஆடினேன்; தோற்றுவிட்டேன். தடைக்கு பிறகு, ”களத்திற்கு போய் அணிக்கு என்ன தேவையோ அதற்கேற்ப ஆடு” என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அணிக்காக ஆட ஆரம்பித்தேன். அதுதான் எனது சிறப்பான ஆட்டத்துக்கு காரணம் என்று ராகுல் தெரிவித்தார்.