ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. 

முதல் போட்டியில் ராகுல் மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடினார். மற்ற வீரர்கள் அனைவருமே படுமோசமாக சொதப்பினர். சஸ்பெண்டிலிருந்து மீண்டுவந்த ராகுல், முதல் போட்டியில் அபாரமான ஷாட்டுகளை ஆடி அரைசதம் அடித்து நல்ல கம்பேக் கொடுத்தார். 

ராகுல் ஃபார்முக்கு திரும்பியிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் விஜய் சங்கர் மற்றும் உமேஷிற்கு பதில் சித்தார்த் கவுல் ஆகிய இரண்டு மாற்றங்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய போட்டி நடக்கும் பெங்களூரு சின்னசாமி மைதானம் சிறிய மைதானம் மட்டுமல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமானது. எனவே குறைந்தது 180 ரன்கள் அடிக்கக்கூடிய மைதானம். இந்த மைதானத்தில் தோனியின் ரெக்கார்டு சிறப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் பெங்களூருவை சேர்ந்த கேஎல் ராகுலுக்கு சொந்த ஊர் மைதானமும் கூட. முதல் போட்டியில் அபாரமாக ஆடிய ராகுல், இரண்டாவது போட்டியில் வெளுத்து வாங்கும் முனைப்பில் உள்ளார். 

வலைப்பயிற்சியில் அவர் அபாரமான சில ஷாட்டுகளை ஆடியுள்ளார். ராகுல் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.