தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் கேப்டன்சி செய்வதன் மூலம் கவாஸ்கர் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோருடன் இணைந்துள்ளார் கேஎல் ராகுல். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

மயன்க் அகர்வால் 26 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து புஜாரா (3) மற்றும் ரஹானே ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். 49 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், கேஎல் ராகுலும் ஹனுமா விஹாரியும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்ரனர். 

முதுகில் தசைப்பிடிப்பு காரணமாக கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் ஆடவில்லை. அதனால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுகிறார். இந்த டெஸ்ட்டில் கேப்டனாக செயல்படுவதன் மூலம் கேஎல் ராகுல் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ஒருநாள் அணிக்கு கேப்டன்சி செய்வதற்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்ட கேப்டன்கள் பட்டியலில் ராகுல் இணைந்துள்ளார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா காயத்தால் ஆடாததால் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒருநாள் அணியை வழிநடத்துவதற்கு முன்பாக டெஸ்ட் அணியை வழிநடத்துகிறார் கேஎல் ராகுல்.

1990ம் ஆண்டு முகமது அசாருதீன் இதேபோன்று டெஸ்ட் அணிக்கு முதலில் கேப்டன்சி செய்தார். அதன்பின்னர் 31 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல் அதை செய்துள்ளார். அதற்கு முன்பாக கவாஸ்கர், பிஎஸ் பேடி மற்றும் அஜித் வடேகர் ஆகியோரும் இதே சம்பவத்தை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.