சூரத்தில் ஹரியானாவுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே நடந்த அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹரியானா அணி 20 ஓவரில் 194 ரன்களை குவித்தது. 

ஹரியானா அணியின் தொடக்க வீரர்கள் சைதன்யாவும் ஹர்ஷல் படேலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 67 ரன்களை சேர்த்தனர். ஹர்ஷல் படேல் 20 பந்தில் 34 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷிவம் சௌஹான் 6 ரன்களில் அவுட்டானார். 

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த சைதன்யா அரைசதம் அடித்தார். 35 பந்தில் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சைதன்யா. நான்காம் வரிசையில் இறங்கிய ஹிமான்ஷு ராணா, அதிரடியாக ஆடி கர்நாடக பவுலிங்கை தெறிக்கவிட்டார். வெறும் 34 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 61 ரன்களை குவித்தார் ஹிமான்ஷு. கர்நாடக பவுலர் அபிமன்யூ மிதுன், கடைசி ஓவரில் ஹிமான்ஷு ராணா உட்பட 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 20 ஓவரில் ஹரியானா அணி 194 ரன்களை குவித்தது. 

195 ரன்கள் என்ற கடின இலக்கை ராகுல் - படிக்கல் ஜோடி தங்களது அதிரடியான தொடக்கத்தின் மூலம் எளிதாக்கியது. தொடக்கம் முதலே ராகுல் மற்றும் படிக்கல் ஆகிய இருவரும் அடித்து ஆடினர். இருவருமே போட்டி போட்டு பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். சாஹல், அமித் மிஷ்ரா ஆகிய அனுபவ ஸ்பின்னர்களின் பவுலிங்கை தெறிக்கவிட்டனர். ஃபாஸ்ட் பவுலிங், ஸ்பின் பவுலிங் என்ற பாரபட்சமே இல்லாமல் அடித்து நொறுக்கினர். 

ராகுல் மற்றும் படிக்கல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்த நிலையில், ராகுல் 31 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ராகுலும் படிக்கல்லும் இணைந்து 9.3 ஓவரில் 125 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் படிக்கல்லுடன் ஜோடி சேர்ந்த மயன்க் அகர்வால், தான் எதிர்கொண்ட மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர் மற்றும் நான்காவது பந்தில் ஒரு சிக்ஸர் என அதிரடி காட்டினார். 

படிக்கல் அரைசதத்திற்கு பின்னர் சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 42 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 87 ரன்களை குவித்து, கர்நாடக அணியின் வெற்றிக்கு வெறும் 13 ரன்கள் தேவைப்பட்டபோது ஆட்டமிழந்தார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் மனீஷ் பாண்டே ஜோடி சேர, அடுத்த ஓவரிலேயே சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார் மயன்க். படிக்கல், ராகுல், அகர்வாலின் அதிரடியால் 195 ரன்கள் என்ற கடின இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது கர்நாடக அணி.