இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஐம்பது ஓவரில் 389 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து 23 ஓவரில் 142 ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஃபின்ச் 60 ரன்களும் வார்னர் 83 ரன்களும் அடித்தனர். 

அதன்பின்னர் ஸ்மித்தின் அதிரடி சதம்(104), மேக்ஸ்வெல்லின் காட்டடி(29 பந்தில் 63 ரன்கள்), லபுஷேனின் அரைசதம்(70) ஆகியவற்றால் 389 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்தது ஆஸ்திரேலியா. 390 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸின் 12வது ஓவரில் நவ்தீப் சைனி 145.6 கிமீ வேகத்தில் வீசிய ஃபுல் டாஸை நேரடியாக வயிற்றிலேயே வாங்கினார் ஆரோன் ஃபின்ச். இதையடுத்து ஒருசில நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட ஃபின்ச், வலியுடன் நின்றுகொண்டிருந்த போது, கேஎல் ராகுல் அவரை வயிற்றை தட்டிப்பார்த்து விளையாடினார். அதற்கு ஃபின்ச்சும் ராகுலை தட்ட, இருவரும் சிரித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.

ஐபிஎல்லில் ஆரோன் ஃபின்ச், ராகுல் ஆகிய இருவரும் இணைந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியதால் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பால் தான் இருவரும் அடித்து விளையாடிக்கொண்டனர்.