ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே ஆஃபில் இடத்தை உறுதி செய்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய இரு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்டன. 

எஞ்சிய ஒரு இடத்திற்கு பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய கேகேஆர் அணி, 6 தொடர் தோல்விகளால் வெறும் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற வாய்ப்பில்லை. 

கேகேஆர் அணி பெற்ற 4 வெற்றிகளிலும் ஆண்ட்ரே ரசலின் பங்களிப்பு அளப்பரியது. கேகேஆர் அணிக்காக அபாரமாக ஆடி அந்த 4 வெற்றிகளையும் பெற்று கொடுத்தார் ரசல். ஒருபுறம் ரசல் அபாரமாக ஆடும் அதேவேளையில் அந்த அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் நல்ல ஃபார்மில் இருந்து அபாரமாக ஆடிவரும் ரசல், முன்வரிசையில் இறக்கப்படாமல் மிகவும் பின்வரிசையில் இறக்கப்படுகிறார். அவரை முன்வரிசையில் இறக்கினால் அந்த அணியின் ஸ்கோர் மேலும் உயரும். 

அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. இன்னும் அந்த அணிக்கு 3 போட்டிகள் எஞ்சியுள்ளன. அதில் 2 போட்டிகள் வலுவான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள். இன்று இரவு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கேகேஆர் அணி ஆட உள்ள நிலையில், தொடர் தோல்விகள் குறித்து அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் ஆண்ட்ரே ரசல். 

இதுகுறித்து பேசிய ரசல், நாங்கள் நல்ல அணிதான். ஆனால் தவறான முடிவுகள் எப்போதுமே தோல்விக்கு வழிவகுக்கும். அதைத்தான் நாங்கள் செய்தோம். பவுலர்கள் சரியான ஏரியாக்களில் பந்துபோடாததும் சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தாதும் சில தோல்விகளுக்கு காரணம். அந்த தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால் சில போட்டிகளில் ஜெயித்திருக்கலாம்.

பவுலர்களை சரியாக பயன்படுத்தாததால் தொடர் தோல்விகளை சந்தித்து இன்று மோசமான நிலையில் இருக்கிறோம். மிகவும் எளிதாக சில போட்டிகளில் தோற்றுவிட்டோம். அவ்வளவு வலுவான பேட்டிங் ஆர்டர் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோற்றது என்னை அதிருப்தியடைய செய்தது. வலுவான பேட்டிங் ஆர்டர் இல்லாத அணியை 170 ரன்களுக்குள் சுருட்ட முடியவில்லை என்றால், மும்பை இந்தியன்ஸ் அணி போன்ற வலுவான அணிக்கு எதிராக ஏதாவது அதிசயம் நடந்தால் தான் உண்டு.

தொழில்முறை வீரரான எனக்கு அணியில் கொடுக்கப்பட்ட இடமும் களமிறக்கப்பட்ட இடமும் சரியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இல்லை. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோற்றதை அடுத்து நான் அறையிலேயே முடங்கி கிடக்கிறேன். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை என்று வெளியே தலைநிமிர்ந்து என்னால் நடக்க முடியாது. அந்த மாதிரியான வீரர் நான் இல்லை. இனி ஆடும் ஆட்டங்களில் எனது உணர்ச்சிவேகம் இன்னும் அதிகமாக இருக்கும். கிரிக்கெட்டின் மீது எனக்கு இருக்கும் பற்றை டிவியில் காட்டாமல் களத்தில் காட்டுவேன் என்று ரசல் தெரிவித்துள்ளார்.