ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை நடந்த போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற்று பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் கேகேஆர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் மற்றும் ஷுப்மன் கில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த லின், ராகுல் சாஹரின் பந்தில் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில்லும் அரைசதம் அடித்தார். 45 பந்துகளில் 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ஆண்ட்ரே ரசல் மூன்றாம் வரிசையில் களமிறங்கினார். நிதானமாக இன்னிங்ஸை தொடங்கிய ரசல், டெத் ஓவர்களில் பும்ரா, மலிங்கா ஆகியோரின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். நடு ஓவர்களிலும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.

பும்ரா வீசிய 19வது ஓவரிலும் மலிங்கா வீசிய கடைசி ஓவரிலும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். 30 பந்துகளில் அரைசதம் அடித்த ரசல், அடுத்த 10 பந்துகளில் 30 ரன்களை குவித்தார். 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் கேகேஆர்  அணி 232 ரன்களை குவித்தது.

233 ரன்கள் என்ற கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிவருகிறது.