Asianet News TamilAsianet News Tamil

7 மேட்சுல 6 விக்கெட் – ரூ.24.75 கோடி வீண் – அடுத்த போட்டியில் ஸ்டார்க் வேண்டாம் – குமுறும் ரசிகர்கள்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 36ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் மிட்செல் ஸ்டார் அதிக ரன்களை வாரி வழங்கி வரும் நிலையில் அடுத்த போட்டிகளில் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

KKR Fans getting angry due to Mitchell Starc bowling performance and asking request should be benched next game rsk
Author
First Published Apr 22, 2024, 2:39 PM IST

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால், அதன் பிறகு தொடங்கிய ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் கேகேஆர் 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 7 போட்டிகளிலும் இடம் பெற்று விளையாடிய மிட்செல் ஸ்டார்க் மொத்தமாக 25 ஓவர்கள் வீசி 287 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார்.

இதில், ஒரு விக்கெட் நேற்று நடந்த ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அதுவும் கடைசி ஓவரில் எடுத்தார். ஆனால், 3 ஓவர்கள் மட்டுமே வீசி 55 ரன்கள் கொடுத்தார். நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான 36ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய கேகேஆர் அணியில் பிலிப் சால்ட் நல்ல தொடக்கம் கொடுத்தார்.

சுனில் நரைன் தடுமாறினாலும், மிடில் ஆர்டரில் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாட்டம் ஆர்டர்னில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ரமன்தீப் சிங் ஓரளவு ரன்கள் எடுத்து கொடுக்க கேகேஆர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் விராட் கோலி நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் அவர் சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது ஹர்ஷித் ராணா வீசிய புல்டாஸ் பந்தில் ஆட்டமிழந்து நோபால் கேட்டார். ஆனால், ரெவியூவில் பந்து ஸ்டெம்பிற்கு மேல் சென்ற நிலையில் அவுட் உறுதி செய்யப்பட்டது. இவரைத் தொடர்ந்து ஃபாப் டூப்ளெசிஸ் 7 ரன்னில் வெளியேறினார். அதன் பிறகு வில் ஜாக்ஸ் மற்றும் ரஜத் படிதார் இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், இருவருமே மாறி மாறி அரைசதம் அடித்தனர். வில் ஜாக்ஸ் 32 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 55 ரன்னில் ஆட்டமிழக்க, ரஜத் படிதாரும் 23 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 52 ரன்னில் நடையை கட்டினார்.

கேமரூன் க்ரீன் 6, மஹிபால் லோம்ரார் 4 ரன்னிலும், சுயாஷ் பிரபுதேசாய் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நம்பிக்கை நட்சத்திரமான தினேஷ் கார்த்திக் தன் பங்கிற்கு 18 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 25 ரன்கள் எடுத்தார். எனினும் கடைசி ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கரண் சர்மா களத்தில் இருந்தார். கடைசி ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் சென்றது. 3ஆவது மற்றும் 4ஆவது பந்திலேயும் கரண் சர்மா சிக்ஸர் அடித்தார்.

இதன் மூலமாக ஆர்சிபி வெற்றியை நெருங்கியது, கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 4ஆவது பந்தில் கரண் சர்மா ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். கடைசியாக லக்கி பெர்குசன் களமிறங்கினார். 2 ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், ஒரு ரன் எடுத்தால் கேகேஆர் வெற்றி, 3 ரன் எடுத்தால் ஆர்சிபி வெற்றி என்ற நிலை இருந்தது.

ஆனால், அவர், ஆஃப் சைடு திசையில் அடித்து விட்டு 2 ரன்கள் எடுக்க ஓடினார். ஆனால், ரமன்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ செய்யவே, அவரும் பந்தை பிடித்து ஸ்பைடர் மேன் மாதிரி டைவ் அடித்து ஸ்டெம்பில் ஸ்டெமிங் செய்வது போன்று ரன் அவுட் செய்தார். இதன் மூலமாக ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்டது. இறுதியாக ஆர்சிபி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக கேகேஆர் ரசிகர்கள் குரல் கொடுக்க தொடங்கினர். இனி வரும் போட்டிகளில் அவரை அணியில் எடுக்க வேண்டாம் என்று எக்ஸ் பக்கங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios