ஐபிஎல்லில் ஆடும் 8 அணிகளில் கேகேஆர் அணியும் ஒன்று. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் கேகேஆர் அணியின் உரிமையாளர். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்ட அணி கேகேஆர். 

ஐபிஎல்லில் 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களிலும் கேகேஆர் அணி கோப்பையை வென்றது. மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு அடுத்தபடியான வெற்றிகரமான அணியும் கேகேஆர் அணிதான். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம், ஆம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் மற்ற பகுதி மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. 

கொரோனாவால் ஏற்கனவே நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தில் பேரிழப்புகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவந்த மேற்கு வங்க மக்களுக்கு ஆம்பன் புயல் ஏற்படுத்திய இழப்பு, அவர்களை மேலும் கடுமையாக பாதித்தது.

இந்நிலையில், கொல்கத்தா, வடக்கு 24 பர்கனாஸ், தெற்கு 24 பர்கனாஸ், கிழக்கு மெதினிபூர் ஆகிய பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு, கேகேஆர் அணி சார்பில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டுவருகிறது. 

மேற்கு வங்க முதல்வர் நிவாரண நிதிக்கு கேகேஆர் அணி நிர்வாகம் சார்பில் நிதியுதவி செய்யப்பட்டது. அத்துடன் நில்லாமல் மக்களுக்கு உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்திவாசிய தேவைகளை பூர்த்தி செய்யும் கேகேஆர் அணி, கொல்கத்தா மாநகரத்தில் 5000 மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. 

ஐபிஎல்லில் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்காமல் நாட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்கும்போது ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதன் மூலம் ரசிகர்களின் மனதிலும், மக்கள் மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துள்ளது கேகேஆர் அணி.