மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்கு கேகேஆர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் 14வது சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கேகேஆர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான, வலுவான மும்பை இந்தியன்ஸ் அணி மீது பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் அணியை அசால்ட்டாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி. 

ரோஹித், டி காக், சூர்யகுமார், இஷான் கிஷன், பொல்லார்டு என வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணியை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, அந்த இலக்கை 15 ஓவர்களிலேயே அடித்து அபார வெற்றி பெற்றது கேகேஆர் அணி.

ஆனால் இந்த போட்டியில் பந்துவீச கேகேஆர் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரம் எடுத்துக்கொண்டது. இந்த சீசனில் 2வது முறையாக கேகேஆர் அணி இந்த தவறை செய்தது. எனவே கேகேஆர் அணி கேப்டன் ஒயின் மோர்கனுக்கு ரூ.24 லட்சம் அபராதமும், மற்ற வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் ஏற்கனவே சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே இது 2வது முறை. இந்த சீசனில் மீண்டுமொரு முறை கேகேஆர் அணி இதே தவறை செய்தால், கேகேஆர் கேப்டன் மோர்கனுக்கு ரூ.36 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன், ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்படும்.