பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 138 ரன்கள் என்ற இலக்கை ஆண்ட்ரே ரசலின் அதிரடி அரைசதத்தால் 15வது ஓவரிலேயே இலக்கை எட்டி கேகேஆர் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மும்பை வான்கடேவில் நடந்த நடந்த போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணி:
அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டிம் சௌதி, உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன், பானுகா ராஜபக்சா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ராஜ் பவா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர்.
முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால் உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய பானுகா ராஜபக்சா, ஷிவம் மாவி வீசிய 4வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி அதே ஓவரில் ஆட்டமிழந்தார். 9 பந்தில் 31 ரன்கள் அடித்து ராஜபக்சா ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் தவான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பவர்ப்ளேயில் 6 ஓவரில் 62 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஆரம்பத்தில் வேகமாக உயர்ந்தாலும், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விழுந்ததால், அந்த அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை. லியாம் லிவிங்ஸ்டோன் 19 ரன்னிலும், ராஜ் பாவா 11 ரன்னிலும், ஷாருக்கான் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒடீன் ஸ்மித் 9 ரன் மட்டுமே அடித்தார். ஆனால் ககிசோ ரபாடா 16 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 ரன்கள் அடித்தார். 6 ஓவரில் 62 ரன்கள் அடித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.2 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
138 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் (3) மற்றும் அஜிங்க்யா ரஹானே (12) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நன்றாக ஆடி 26 ரன்கள் அடித்து ராகுல் சாஹரின் சுழலில் விழ, அதே ஓவரில் நிதிஷ் ராணாவும் டக் அவுட்டாகி வெளியேற, 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை கேகேஆர் இழந்துவிட்டதால், 8வது ஓவரிலேயே ஆண்ட்ரே ரசல் களத்திற்கு வர நேரிட்டது.
நிதானமாக ஆடி களத்தில் செட்டில் ஆன ஆண்ட்ரே ரசல், ஒடீன் ஸ்மித் வீசிய 12வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். சாம் பில்லிங்ஸும் அந்த ஓவரில் கிடைத்த ஒரு நோ பால் ஃப்ரீ ஹிட்டில் சிக்ஸர் அடிக்க, அந்த ஓவரில் மொத்தமாக கேகேஆர் அணிக்கு 30 ரன்கள் கிடைத்தது. 26 பந்தில் அரைசதம் அடித்தார் ஆண்ட்ரே ரசல். ரசலின் அதிரடியான பேட்டிங்கால் 15வது ஓவரிலேயே138 ரன்கள் என்ற இலக்கை எட்டி கேகேஆர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வான்கடேவில் சிக்ஸர் மழை பொழிந்த ஆண்ட்ரே ரசல் 31 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார். வான்கடேவில் ரசல் நடத்திய வாணவேடிக்கை ரசிகர்களுக்கு செம எண்டர்டெய்ன்மெண்ட்டாக அமைந்தது.
