ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கோப்பைகளை அள்ளும் நிலையில், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

அந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றன. முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை இந்த அணிகள் மேற்கொண்டு வருகின்றன. 

ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை மேற்கொள்வதே ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் தோல்விக்கும் ஒரு காரணம். அடுத்த சீசனிற்கும் இந்த அணிகள் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சீசனில் இருந்த மைக் ஹெசன் அடுத்த சீசனில் ஆர்சிபி அணியின் இயக்குநராக செயல்படவுள்ளார். 

கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன், ஆர்சிபி அணியின் இயக்குநராகிவிட்டதால், புதிய தலைமை பயிற்சியாளரை தேடிவருகிறது பஞ்சாப் அணி. 

பஞ்சாப் அணி மைக் ஹசியை தலைமை பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஎஸ்கே அணியில் ஏற்கனவே ஆடியிருக்கும் மைக் ஹசி, தற்போது அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்துவருகிறார். இந்நிலையில், அவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் ஐடியாவில் பஞ்சாப் அணி உள்ளது. மைக் ஹசி மட்டுமல்லாமல் டேரன் லேமன்(ஆஸ்திரேலியா), ஜார்ஜ் பெய்லி, ஆண்டி ஃப்ளார் ஆகியோரையும் பரிசீலனை பட்டியலில் வைத்துள்ளது அந்த அணி. 

இவர்களில் ஜார்ஜ் பெய்லி ஏற்கனவே பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து அந்த அணியை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அணியுடன் அவருக்கு ஏற்கனவே தொடர்பு இருப்பதால், அவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.