ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. கிங்ஸ் லெவன் பஞ்சாப், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் இந்த சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன.

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் புதிய கேப்டன், புதிய தலைமை பயிற்சியாளர்களின் தலைமையில் செயல்படுகிறது. இந்த சீசனில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக லெஜண்ட் அனில் கும்ப்ளே செயல்படுகிறார். இளம் துடிப்பான மற்றும் அதிரடி வீரரான கேஎல் ராகுல் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார்.

கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில், கிறிஸ் கெய்ல், மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரான் ஆகிய வெளிநாட்டு அதிரடி வீரர்களும், மயன்க் அகர்வால், கருண் நாயர், சர்ஃபராஸ் கான், மந்தீப் சிங் ஆகிய உள்நாட்டு சிறந்த வீரர்களும் என நல்ல கலவையிலான அணியாக உள்ளது. ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு முகமது ஷமி இருக்கிறார். இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் மற்றும் நியூசிலாந்து அதிரடி ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஆகியோரும் ஸ்பின்னர்கள் முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின் ஆகியோரும் உள்ளனர்.

2017க்கு பிறகு பஞ்சாப் அணியில் ஆடிராத அந்த அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் க்ளென் மேக்ஸ்வெல், இந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார். அவரை ரூ.10.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. மேக்ஸ்வெல்லை அவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்ததற்கான காரணத்தை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

Also Read - ஐபிஎல் 2020: அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசலை அல்லு தெறிக்கவிட அந்த ஒரு பவுலரால் மட்டுமே முடியும்.. கம்பீர் அதிரடி

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அனில் கும்ப்ளே, ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீரரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அதனால் தான் மேக்ஸ்வெல்லை எடுத்தோம். அதிரடி பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் அணிக்கு பங்களிப்பு செய்யக்கூடியவர் மேக்ஸ்வெல். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு வலுசேர்க்கும் விதமாக கோட்ரெலை எடுத்தோம். ஒட்டுமொத்தமாக எங்கள் அணி எங்களுக்கு திருப்திகரமானதாக உள்ளது என்றார் அனில் கும்ப்ளே.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராகவும் மேட்ச் வின்னராகவும் ஜொலித்தவர் மேக்ஸ்வெல். 2014 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதல் முறையாக இறுதி போட்டி வரை சென்றதற்கு மேக்ஸ்வெல் மிக முக்கிய காரணம். அந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடி 552 ரன்களை குவித்த மேக்ஸ்வெல், அதற்கடுத்தடுத்த சீசன்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 2015, 2016  மற்றும் 2017 ஆகிய சீசன்களில் முறையே 145, 179 மற்றும் 310 ரன்கள் அடித்த மேக்ஸ்வெல், 2018 ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடினார். 2019 ஐபிஎல்லில் அவர் ஆடவில்லை. உலக கோப்பைக்கு தயாராகும் விதமாக கடந்த சீசனிலிருந்து விலகிய அவரை, இந்த சீசனில் மீண்டும் பஞ்சாப் அணி எடுத்தது. அதுவும் ஏலத்தில் மற்ற அணிகளுடன் போட்டிபோட்டு அவரை ரூ.10.75 கோடிக்கு எடுத்தது.

Also Read - ஐபிஎல் 2020: அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 வீரர்கள்.. தோனி, ரோஹித்தையே தூக்கியடித்த வெளிநாட்டு வீரர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்:

கேஎல் ராகுல்(கேப்டன்), மயன்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், அர்ஷ்தீப் சிங், தர்ஷன் நால்கண்டே, ஹார்டஸ் வில்ஜோயன், ஹர்ப்ரீத் ப்ரார், கருண் நாயர், மந்தீப் சிங், முகமது ஷமி, முஜீபுர் ரஹ்மான், முருகன் அஷ்வின், நிகோலஸ் பூரான், சர்ஃபராஸ் கான், கிருஷ்ணப்பா கௌதம், ஜெகதீஷா சுஜித், க்ளென் மேக்ஸ்வெல், கோட்ரெல், கிறிஸ் ஜோர்டான், ரவி போஷ்னோய், ப்ரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஜிம்மி நீஷம், தஜிந்தர் திலான், இஷான் போரெல்.