கொரோனா வைரஸ் உலகம் முழுதும் வேகமாக பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா அச்சுறுத்தலின் விளைவாக, இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டு, தென்னாப்பிரிக்க வீரர்கள் பத்திரமாக திருப்பியனுப்பப்பட்டனர். மார்ச் 29ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் தொடர், ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, ஜெய் ஷா மற்றும் அணி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு தான் முக்கியமே தவிர வருவாய் இழப்பு பெரிய விஷயமல்ல என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாகவும், ஐபிஎல்லை நடத்துவது குறித்து கொரோனாவின் தாக்கத்தை பொறுத்து, விவாதித்து முடிவெடுக்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்தது. 

Also Read - ஆஸ்திரேலியாவுக்கு அப்போ தெரியாது; மார்ச் 14 வரலாற்றில் இடம்பிடிக்கப்போதுகுனு! வரலாறு படைத்த டிராவிட் - லட்சுமணன்

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கோ ஓனர் நெஸ்வாடியா, ஐபிஎல் குறித்து பேசினார். ”பிசிசிஐ, அணி உரிமையாளர்கள், ஒளிபரப்பும் உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் என அனைத்து தரப்பினரும், மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். எனவே வருவாய் இழப்பை பற்றி கவலைப்படவில்லை. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லை என்றால் ஐபிஎல் நடத்தப்படாமல் கூட போகலாம் என்றார். ஆனால் அதற்காக வருவாய் இழப்பைப் பற்றியெல்லாம் கவலைகொள்ள முடியாது என்றார்.