பஞ்சாப் அணி அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக கேப்டனாக இருந்த அஷ்வினை டெல்லி அணிக்கு தாரைவார்த்தது. புதிய தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை நியமித்தது. 

இன்று பிற்பகல் மூன்றரை மணிக்கு ஐபிஎல் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாக பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களை நியமித்துள்ளது. 

பஞ்சாப் அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபரும், ஃபீல்டிங் பயிற்சியாளராக லெஜண்ட் ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஐபிஎல்லில் முதல் இரண்டு சீசன்களில்(2008 - 2009) ஆர்சிபி அணியில் இடம்பெற்றிருந்தார் வாசிம் ஜாஃபர். அதன்பின்னர் அவர் ஐபிஎல் அணிகளில் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மீண்டும் ஐபிஎல்லில் பேட்டிங் பயிற்சியாளராக கால்வைக்கிறார்.

வாசிம் ஜாஃபர் நிறைய உள்நாட்டு போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர். அண்மையில் 150வது ரஞ்சி போட்டியில் ஆடி, இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.