இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டி ஆண்டிகுவாவில் நடந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில், டிக்வெல்லா(33) மற்றும் நிசாங்கா(39) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடாததால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது.

வெறும் 132 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் லெண்டல் சிம்மன்ஸ்(26) மற்றும் எவின் லூயிஸ்(28) ஆகிய இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் கெய்ல் மற்றும் நிகோலஸ் பூரான் ஆகிய இருவரும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, 5வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட பொல்லார்டு, 6வது ஓவரில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசினார்.

தனஞ்செயா வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த பொல்லார்டு, அந்த ஓவரில் எஞ்சிய 5 பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசினார். ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசி, டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய சாதனையில் யுவராஜ் சிங்குடன் இணைந்தார். தென்னாப்பிரிக்க முன்னாள் தொடக்க வீரர் ஹெர்ஷல் கிப்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசியிருக்கிறார்.

பொல்லார்டு 11 பந்தில் 6 சிக்ஸர்களுடன் 38 ரன்கள் விளாச, 13வது ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பொல்லார்டு.