2013 ஐபிஎல்லில் சூதாட்டப்புகாரால் வாழ்நாள் தடை பெற்ற இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதையடுத்து, அவர் மீதான தடை வரும் செப்டம்பர் மாதம் முடிவடைகிறது. 

தடை முடியவுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு தனது மாநில அணியான கேரள அணிக்கும், மீண்டும் தேசிய அணியிலும் ஆடும் ஆர்வத்தில் உள்ளார் ஸ்ரீசாந்த். 

கேரள கிரிக்கெட் வாரியம், ஸ்ரீசாந்த்தின் கம்பேக்கால் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஸ்ரீசாந்த் கேரள அணிக்காக உள்நாட்டு போட்டிகளில் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லையென்றாலும், அவர் கேரள அணியில் ஆடுவது உறுதியாகிவிட்டது. 

ஸ்ரீசாந்த்தின் கம்பேக்கில், கேரள அணி வீரர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள அணியின் கேப்டனான சச்சின் பேபி, தனது சகோதரரான ஸ்ரீசாந்த்தின் கம்பேக்கால் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், அணியே உற்சாகமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த் கம்பேக் குறித்து ”ஹோம்ரன் வித் ஏவி” என்ற யூடியூப் உரையாடல் நிகழ்ச்சியில் வர்ணனையாளர் அருண் வேணுகோபாலிடம் பேசிய சச்சின் பேபி, ஸ்ரீசாந்த் என்னுடைய மூத்த சகோதரர். அவர் கிரிக்கெட்டில் ஆடாவிட்டாலும், கேரள அணியின் கேப்டனாக நான் பொறுப்பேற்றதும், கேரள அணியை எப்படி வழிநடத்த வேண்டும், அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளையும் உள்ளீடுகளையும் எனக்கு கொடுத்துக்கொண்டே தான் இருந்தார். அவர் அணியில் ஆடாவிட்டாலும் எங்களுடன் தொடர்ந்து பயணித்து கொண்டு தான் இருக்கிறார். 

அவர் கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடவில்லை. ஆனாலும் அவர் எனக்கு பந்துவீசும்போதெல்லாம் நான் அவுட்டாகிவிடுவேன். அவரது வேகமும் ஸ்விங்கும் இன்னும் அப்படியே இருக்கிறது. இப்போதும் கூட, அவரது பவுலிங்கை ஆடுவது கடினமாக இருக்கிறது. லாக்டவுனிலிருந்து மீண்ட பின்னர், மைதானத்தில் இறங்கி ஆடும் தருணத்திற்காக காத்திருக்கிறோம் என்று சச்சின் பேபி தெரிவித்தார்.