பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் 8 ரன்களிலும் கருண் நாயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து மற்றொரு தொடக்க வீரரான கேஎல் ராகுலுடன் கேப்டன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 

கர்நாடக அணியின் சீனியர் வீரர்களான இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராகுல் சற்று மந்தமாக ஆட, மனீஷ் பாண்டே பந்துகளை வீணடிக்காமல் ரன்னை சேர்த்தார். இருவருமே அரைசதம் கடந்த நிலையில், ராகுல் 103 பந்தில் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 150 ரன்களை சேர்த்தனர். ராகுல் ஆட்டமிழந்த பிறகும், தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த மனீஷ் பாண்டே சதமடித்து அசத்தினார். 

சதத்திற்கு பிறகும் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய மனீஷ் பாண்டே, 118 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 142 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மனீஷ் பாண்டேவின் அதிரடியான சதத்தால் கர்நாடக அணி, 50 ஓவரில் 285 ரன்களை குவித்தது. 

286 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சத்தீஸ்கர் அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அதனால் அந்த அணி 45வது ஓவரில் 206 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து 79 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி அபார வெற்றி பெற்றது.