சையத் முஷ்டாக் அலி தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரண்டு அணிகளும் இறுதி போட்டியில் மோதின. சிறந்த பவுலிங் அணியான தமிழ்நாட்டிற்கும், சிறந்த பேட்டிங் அணியான கர்நாடகாவிற்கும் இடையேயான இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூரத்தில் நேற்று நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்திக், கர்நாடக அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். இரண்டாவது இன்னிங்ஸின் போது, பனியின் காரணமாக பந்து வீசுவது கடினமாக இருக்கும் என்பதால் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது சவாலாக இருக்கும். அதனால் முதலில் கர்நாடக அணியை பேட்டிங் செய்ய பணித்தார். 

கர்நாடக அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல் 15 பந்தில் 22 ரன்கள் அடித்து அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த மயன்க் அகர்வால் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து தேவ்தத் படிக்கல்லுடன் கேப்டன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். படிக்கல் 23 பந்தில் 32 ரன்கள் அடித்து வாஷிங்டன் சுந்தரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

கேப்டன் மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடி கர்நாடக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ரோஹன் கடமும் ஆடினார். ரோஹனும் தன் பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசி 28 பந்தில் 35 ரன்கள் அடித்து முருகன் அஸ்வினின் சுழலில் வீழ்ந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கருண் நாயர் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களை அடித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். பொறுப்பாகவும் அதிரடியாகவும் ஆடிய கேப்டன் மனீஷ் பாண்டே அரைசதம் அடித்தார். 45 பந்தில் 60 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் மனீஷ் பாண்டே. 

இதையடுத்து கர்நாடக அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் அடித்தது. 181 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஷாருக்கான் மற்றும் ஹரி நிஷாந்த் ஆகிய இருவருமே சோபிக்கவில்லை. ஷாருக்கான் 16 ரன்களிலும் ஹரி நிஷாந்த் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் வாஷிங்டன் சுந்தரும் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் இணைந்து சிறப்பாக ஆடினர். 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து, இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் ஆடி தமிழ்நாடு அணியை காப்பாற்றிய வாஷிங்டன் சுந்தரும் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதையடுத்து பாபா அபரஜித்தும் விஜய் சங்கரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடனும் அபாரமாகவும் ஆடினர். குறிப்பாக பாபா அபரஜித், ஒவ்வொரு ஓவரின் முதல் பந்தையும் டார்கெட் செய்து பெரிய ஷாட் ஆடி, இலக்கை நோக்கி சரியான திட்டமிடலுடன் சென்று கொண்டிருந்தார். அவருக்கு விஜய் சங்கரும் ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். 

கடைசி 3 ஓவர்களுக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில், வெற்றிக்கு அருகில் தமிழ்நாடு அணி இருந்த நிலையில், 18வது ஓவரின் முதல் பந்தை தூக்கியடித்த அபரஜித் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். 25 பந்துகளில் 40 ரன்களை அடித்து அபரஜித் ஆட்டமிழக்க, அதன்பின்னர் பொறுப்பு முழுவதும் விஜய் சங்கரின் மீது இறங்கியது. அபரஜித் ஆட்டமிழந்த பிறகு அஷ்வின் களத்திற்கு வந்தார். அபரஜித் 18வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழக்க, எஞ்சிய 5 பந்தில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. 

இதையடுத்து கடைசி 2 ஓவர்களில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. கௌஷிக் வீசிய அந்த ஓவரில் அஷ்வின் ஒரு பவுண்டரியும் விஜய் சங்கர் ஒரு பவுண்டரியும் அடித்தனர். எனவே அந்த ஓவரில் 12 ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை. 

ஆட்டம் பரபரப்பான கட்டத்தில் இருந்த நிலையில், மிகவும் முக்கியமான அந்த ஓவரை கிருஷ்ணப்பா கௌதமிடம் கொடுத்தார் கர்நாடக கேப்டன் மனீஷ் பாண்டே. அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி மிரட்டிய அஷ்வின், மூன்றாவது பந்தில் ரன் அடிக்காமல், நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். இதையடுத்து கடைசி 2 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில், இரண்டு ரன் ஓடும் முயற்சியில், இரண்டாவது ரன்னை ஓடி முடிக்க முடியாமல் விஜய் சங்கர் ரன் அவுட்டானார். இதையடுத்து கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முருகன் அஷ்வின் ஒரு ரன் மட்டுமே அடிக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற கர்நாடக அணி கோப்பையை வென்றது. 

விஜய் ஹசாரே தொடரின் இறுதி போட்டியிலும் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் தான் மோதின. அதிலும் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடகா அணிதான் கோப்பையை வென்றது. இப்போது சையத் முஷ்டாக் அலி தொடரின் இறுதி போட்டியிலும் தமிழ்நாடு அணியை வீழ்த்தி கர்நாடக அணி கோப்பையை வென்றுள்ளது.