தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையேயான சூப்பர் லீக் போட்டி சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஹரி நிஷாந்த் மற்றும் பாபா அபரஜித் ஆகிய இருவருமே சோபிக்கவில்லை. 

அதன்பின்னர் மூன்றாம் வரிசையில் களத்திற்கு வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் நான்காம் வரிசையில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான அடுத்த ஓவரிலேயே 39 ரன்களில் சுந்தரும் அவுட்டாக, அதன்பின்னர் தமிழ்நாடு அணியின் ரன்ரேட் வேகம் குறைந்தது. 25 பந்துகளில் 39 ரன்கள் அடித்து சுந்தர் அவுட்டானார். 

விஜய் சங்கர் தன் பங்கிற்கு 15 பந்தில் 25 ரன்கள் அடித்தார். ஷாருக்கான் ஒரே ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இதையடுத்து தமிழ்நாடு அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. 159 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

ராகுலும் படிக்கல்லும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். படிக்கல் 36 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் கேப்டன் மனீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து தமிழ்நாடு அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய ராகுல் அரைசதம் அடிக்க, மனீஷ் பாண்டேவும் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்தே இலக்கை எட்டிவிட்டனர். இந்த ஜோடியை தமிழ்நாடு பவுலர்களால் பிரிக்கவே முடியவில்லை. 

ராகுல், மனீஷ் பாண்டேவின் அதிரடியான பேட்டிங்கால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி கர்நாடக அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராகுல் 46 பந்துகளில் 69 ரன்களையும் மனீஷ் பாண்டே 33 பந்தில் 52 ரன்களையும் விளாசினர்.