Asianet News TamilAsianet News Tamil

ரவி சாஸ்திரி - விராட் கோலி காம்போவிற்கு மார்க் போட்ட கபில் தேவ்..! 100க்கு எத்தனை மார்க்னு பாருங்க

ரவி சாஸ்திரி - விராட் கோலி இணைக்கு கபில் தேவ், 100க்கு மதிப்பெண்கள் கொடுத்து மதிப்பீடு செய்துள்ளார்.
 

kapil dev value ravi shastri and virat kohli combo by putting mark out of 100
Author
Chennai, First Published Nov 17, 2021, 6:32 PM IST

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியிலிருந்து கேப்டன் விராட் கோலி விலகிவிட்ட நிலையில், 2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிந்துவிட்டது. இந்திய அணி ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் (இப்போதைக்கு டி20 மட்டும், விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டும் சேர்த்து) இந்திய அணி புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது.

ரவி சாஸ்திரி பயிற்சியில், விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனையை படைத்ததுடன், ஒன்றுக்கு இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றது. இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடியது. வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்த இந்திய அணி, அனைத்து அணிகளுக்கு எதிராகவும் டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான தொடர்களையும் வென்றது.

2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை அரையிறுதி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் என கடைசி வரை முன்னேறி, முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று ஐசிசி கோப்பையை வெல்லும் வாய்ப்புகளை இழந்தது இந்திய அணி. டெஸ்ட் தரவரிசையில் நீண்டகாலம் முதலிடம், வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களில் வெற்றி, அனைத்து அணிகளுக்கு எதிராகவும் எல்லாவிதமான போட்டிகளிலும் வெற்றி என ரவி சாஸ்திரி - விராட் கோலி காம்போ வெற்றிகளை குவித்திருந்தாலும், ஐசிசி கோப்பை ஒன்றை வெல்லவில்லை என்பது இவர்கள் மீதான கரும்புள்ளியாக  அமைந்துவிட்டது.

இந்நிலையில் ரவி சாஸ்திரி - விராட் கோலி காம்போ குறித்து பேசியுள்ள கபில் தேவ், ரவி சாஸ்திரி - விராட் கோலி சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் 5 ஆண்டுகளில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லவில்லை. ஆனால் அதைத்தவிர குறைபாடு என்று எதுவுமே இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என உலகம் முழுதும் வெற்றிகளை குவித்துள்ளனர்.

நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதே  பெரிய விஷயம் தான். 2007 ஒருநாள் உலக கோப்பைக்கு பின்னர் இந்த டி20 உலக கோப்பையில் தான் இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கே முன்னேறாமல் வெளியேறியது. அது பெரிய ஏமாற்றம் தான். நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறவில்லை என்றால், விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

ஐசிசி கோப்பையை வென்றதில்லை என்ற விஷயத்தை ஒதுக்கிவிட்டு, ரவி சாஸ்திரி - விராட் கோலி வழிகாட்டுதலில் இந்திய அணி கிரிக்கெட் ஆடிய விதத்தை மதிப்பிட வேண்டுமென்றால், 100க்கு 90 மதிப்பெண்கள் கொடுப்பேன் என்றார் கபில் தேவ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios