புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் உலகம் முழுவதும் அபாரமாக பந்துவீசி இந்திய அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுக்கின்றனர். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இந்திய அணி ஃபாஸ்ட் பவுலிங்கில் சிறந்து விளங்கினாலும், பும்ராவின் வருகைக்கு பிறகு உலகளவில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாகியிருக்கிறது. 

வித்தியாசமான பவுலிங் ஸ்டைலை கொண்ட பும்ரா, நல்ல வேகத்துடன் மிகத்துல்லியமாக வீசி எதிரணிகளை மிரட்டுகிறார். அவரது துல்லியமான யார்க்கர் மற்றும் பவுன்ஸர்கள் அவரது மிகப்பெரிய பலம். புவனேஷ்வர் குமார் வேகமாக வீசாவிட்டாலும் நன்றாக ஸ்விங் செய்யக்கூடியவர். புதிய பந்தில் அபாரமாக வீசவல்லவர். ஷமி நல்ல வேகத்துடன் ஸ்விங்கும் செய்பவர். அதிலும் ஷமியின் ஸ்பெஷலே அவரது ரிவர்ஸ் ஸ்விங் தான். 

உமேஷ் யாதவும் நல்ல வேகத்தில் வீசக்கூடியவர். இவர்கள் அனைவரை காட்டிலும் நீண்ட அனுபவம் கொண்டவர் இஷாந்த் சர்மா. டெஸ்ட் அணியின் முதன்மை ஃபாஸ்ட் பவுலராக இஷாந்த் சர்மா திகழ்கிறார். இவ்வாறு அனைத்து வகையான திறமையும் கொண்ட நல்ல கலவையிலான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருப்பதுதான் சிறப்பு. இவர்கள் தவிர தீபக் சாஹர் மற்றும் நவ்தீப் சைனியும் அசத்திவருகின்றனர். 

இந்திய அணி இதுவரை இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருக்கிறது. அதில் எந்தவித சந்தேகமுமில்லை. இந்நிலையில், இதுதான் இந்திய அணியின் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டா என்ற கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், அதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா..? என்றார். 

மேலும், இதுவரை இந்திய அணியில் இப்பேர்ப்பட்ட ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கை பார்த்ததில்லை. இப்படியொரு ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் அமையும் என நினைத்ததும் இல்லை. அதனால் யாரும் சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் அபாரமாக உள்ளது என்பதில் துளியும் சந்தேகமில்லை. இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியமைத்துள்ளது இந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் என்று கபில் தேவ் புகழாரம் சூட்டினார். 

ஷமி குறித்து பேசிய கபில் தேவ், ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் டாப் 10 இடங்களில் ஷமி இருக்கிறாரா இல்லையா என்பது அல்ல விஷயம். மாறாக, இந்திய அணியிலும் போட்டியிலும் எந்தவிதமான தாக்கத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதே முக்கியம் என்று கபில் தேவ் தெரிவித்தார்.