நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வில்லியம்சனின் இரட்டை சதத்தால் முதல் இன்னிங்ஸில் 519 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லேதமும் வில் யங்கும் இறங்கினர். வில் யங் வெறும் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டாம் லேதமுடன் ஜோடி சேர்ந்து வில்லியம்சன் சிறப்பாக ஆட, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 154 ரன்களை சேர்த்தனர்.

அரைசதம் அடித்த டாம் லேதம், 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் வில்லியம்சனுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். செம ஃபார்மில் இருக்கும் வில்லியம்சன், களத்தில் நங்கூரமிட்டு சதத்தை நெருங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிந்தது. 

வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து சிறப்பாக ஆடிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் 78 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் அடித்திருந்தது. இன்று களத்திற்கு வந்ததுமே 38 ரன்களுக்கு டெய்லர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஹென்ரி நிகோல்ஸ் 7 ரன்களுக்கும் டாம் பிளண்டல் 14 ரன்களுக்கும் டேரைல் மிட்செல் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய வில்லியம்சன், இரட்டை சதமடித்து அசத்தினார். இரட்டை சதத்திற்கு பிறகும் அபாரமாக ஆடிய வில்லியம்சன் 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜாமிசன் அரைசதம் அடித்தார். நியூசிலாந்தின் ஸ்கோர்  503 ரன்களாக இருந்தபோது வில்லியம்சன் அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 519 ரன்கள் அடித்திருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.