வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி வென்றது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நடந்துவருகிறது.

இன்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்ததையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டாம் லேதமும் வில் யங்கும் இறங்கினர். வில் யங் வெறும் ஐந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் டாம் லேதமுடன் ஜோடி சேர்ந்து வில்லியம்சன் சிறப்பாக ஆட, 2வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 154 ரன்களை சேர்த்தனர்.

அரைசதம் அடித்த டாம் லேதம், 86 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் வில்லியம்சனுடன் ரோஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். செம ஃபார்மில் இருக்கும் வில்லியம்சன், அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். களத்தில் நன்றாக செட்டில் ஆகி நங்கூரமிட்ட வில்லியம்சனை வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

வில்லியம்சனும் டெய்லரும் இணைந்து சிறப்பாக ஆடிய நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் 78 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் அடித்தது. வில்லியம்சன் 219 பந்தில் 97 ரன்கள் அடித்து, சதத்தை 3 ரன்களை எதிர்நோக்கியவாறு களத்தில் உள்ளார். ரோஸ் டெய்லர் 31 ரன்களுடன் களத்தில் உள்ளார்.