தோனி, கில்கிறிஸ்ட்டை எல்லாம் மிஞ்சி ஒரு சாதனையை படைத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் காம்ரான் அக்மல். 

2002ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் அறிமுகமான காம்ரான் அக்மல், 2010ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு வரை ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் ஆடிவந்தார். அதன்பின்னர் அணியில் இடம்பெறவில்லை. 

அக்மலுக்கு தற்போது 37 வயது என்பதால், அவர் இனிமேல் பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. இந்நிலையில், முதல் தர கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவரும் அக்மல், அபார சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

செண்ட்ரல் பஞ்சாப் அணிக்காக ஆடிவரும் காம்ரான் அக்மல், வடக்கு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 157 ரன்களை குவித்தார். இந்த சதம் முதல் தர கிரிக்கெட்டில் காம்ரான் அக்மல் அடித்த 31வது சதம். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். கில்கிறிஸ்ட், தோனி போன்ற ஜாம்பவான்களே அக்மலுக்கு பின்னால்தான் இருக்கிறார்கள். 

இந்த பட்டியலில் முதலிடத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் லெஸ் ஆம்ஸ் இருக்கிறார். 31 சதங்களுடன் அக்மல் இரண்டாமிடத்திலும் 29 சதங்களுடன் கில்கிறிஸ்ட் மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர்.