மனசாட்சியே இல்லாமல் அடிச்ச ஜோஷ் இங்கிலிஸ் – 47 பந்துகளில் 102 ரன்கள், முதல் முறையாக சதம் அடித்து சாதனை!
இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியாக விளையாடி தனது முதல் சர்வதேச சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து, டி20 போட்டியிலாவது அதற்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா எந்த இடத்தில் விட்டதோ அந்த இடத்திலிருந்து அந்த அணியின் ஜோஷ் இங்கிலிஸ் அதிரடியை தொடங்கி சதம் விளாசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் 13ஆவது டி20 போட்டி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக இருந்த ஜோஷ் இங்கிலிஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அவர், 29 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 18 பந்துகளில் 49 ரன்கள் குவித்து 47 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து சர்வதேச போட்டிகளில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். அதோடு, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.
கடைசியாக 50 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதில், அவர் 8 சிக்ஸர்களும் 11 பவுண்டரிகளும் அடித்துள்ளார். ஆனால், உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.