ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 169 ரன்களை குவித்து, 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நவ்தீப் சைனி, டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். நன்றாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற ஜோஸ் பட்லருக்கு சரியாக ஷாட்டுகள் கனெக்ட் ஆகாமல் திணறினார். ஆகாஷ் தீப்பின் பவுலிங்கில் ஒரே ஓவரில் 2 கேட்ச்களை பட்லருக்கு தவறவிட்டனர் ஆர்சிபி வீரர்கள். பட்லருக்கு ஷாட் கனெக்ட் ஆகாததால் அணியின் ஸ்கோர் உயரவேயில்லை.

18 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ராஜஸ்தான் அணி. ஆனால் கடைசி 2 ஓவரில் பட்லர் அடி வெளுத்துவிட்டார். 19வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடித்த பட்லர், கடைசி ஓவரிலும் 2சிக்ஸர்கள் அடித்தார். பட்லர் 47 பந்தில் 70 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 169 ரன்கள் அடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. பட்லரின் அதிரடியால் கடைசி 2 ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 42 ரன்கள் கிடைத்தது.