கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். 

பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார். 

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்குக்கூட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில், ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டரான ஜாண்டி ரோட்ஸ், சமகால கிரிக்கெட்டில் சிறந்த ஃபீல்டர்கள் என இருவரை தேர்வு செய்துள்ளார். 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு ஜாண்டி ரோட்ஸ் அளித்த பேட்டியில் சமகால கிரிக்கெட்டில் சிறந்த ஃபீல்டர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஜாண்டி ரோட்ஸ், மார்டின் கப்டில் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் சிறந்த ஃபீல்டர்கள் என தெரிவித்தார். 

அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜாண்டி ரோட்ஸ், மார்டின் கப்டிலும் ஜடேஜாவும் சிறந்த ஃபீல்டர்கள். ஜடேஜா எல்லா போட்டிகளிலும் ஆடுவதில்லை. ஆனால் கப்டில் எல்லா போட்டிகளிலும் ஆடுகிறார். ஸ்லிப், கவர் திசை, பவுண்டரி லைன் என அனைத்து இடங்களிலும் அபாரமாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர் கப்டில். ஜடேஜா எக்ஸ் ஃபேக்டர். நிறைய நல்ல ஃபீல்டர்கள் இருக்கிறார்கள். அவர்களில் கப்டில் தான் பெஸ்ட் என்று ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை அரையிறுதியில், பரபரப்பான இறுதிக்கட்டத்தில் தோனியை பவுண்டரி லைனிலிருந்து துல்லியமாக த்ரோ விட்டு நூலிழையில் ரன் அவுட் செய்தது கப்டில் தான். அதேபோல் உலக கோப்பையில் லெக் கல்லி ஃபீல்டிங் திசையில் ஒரு அசாத்தியமான கேட்ச்சை பிடித்திருந்தார். உலக கோப்பையில் ஃபீல்டிங்கின் மூலம் அதிக  ரன்களை கட்டுப்படுத்தியதும் கப்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆல்டைம் சிறந்த ஃபீல்டர்களாக ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பால் கோலிங்வுட், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் மற்றும் கிப்ஸ், இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஆகிய ஐந்து பேரையும் ஏற்கனவே ஜாண்டி ரோட்ஸ் தேர்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.