சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி - ஸ்டீவ் ஸ்மித் திகழ்ந்துவருகின்றனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித் சாதனைகளை குவித்துவருகிறார். ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்தார் ஸ்டீவ் ஸ்மித். 

7 இன்னிங்ஸ்களில் ஒரு இரட்டை சதம், 2 சதங்கள், 3 அரைசதங்கள் என ஆஷஸ் தொடர் முழுவதுமே அசத்தலாக ஆடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவில் 26 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். ஆஷஸ் கிரிக்கெட்டில் டான் பிராட்மேனின் சாதனையையே மிஞ்சுமளவிற்கு ஆடினார்.

விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார். ஸ்மித் தடையில் இருந்த சமயத்தில், கோலி முதலிடத்தில் நீடித்த நிலையில், ஸ்மித் திரும்ப வந்து, ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி முதலிடத்தை பிடித்துவிட்டார். 

இந்நிலையில், ஸ்மித் - கோலி ஆகிய இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வி பல முன்னாள் ஜாம்பவான்களிடம் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜாண்டி ரோட்ஸிடமும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஜாண்டி ரோட்ஸ், எனக்கு விராட் கோலியின் பேட்டிங் தான் பிடிக்கும். அவரது ஆட்டத்தை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன். கோலி ஆடும் ஷாட்டுகள் என்னை வியக்கவைத்திருக்கின்றன. எப்படி ஒரு பேட்ஸ்மேனால் இந்தளவிற்கு ஆடமுடியும் என்று நான் வியந்திருக்கிறேன். ஆனால் ஸ்மித்தோ மோசமான பேட்டிங் ஆக்‌ஷன் மற்றும் டெக்னிக்குகளை வைத்துக்கொண்டு தெளிவில்லாத மோசமான ஆட்டத்தின் மூலம் சதமடிக்கிறார். இப்படிப்பட்ட மோசமான சதங்களை நான் இதுவரை கண்டதில்லை என்று விராட் கோலியை புகழ்ந்தும் ஸ்மித்தை இகழ்ந்தும் பேசியுள்ளார் ஜாண்டி ரோட்ஸ்.