உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணியும் உள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்கிறது. இதற்கிடையே, அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காஃபி வித் கரன் நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சில போட்டிகளில் தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, இந்த விவகாரத்திற்கு பின்னர் புது மனிதராகவும் அபாரமான வீரராகவும் உருவெடுத்துள்ளார். டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா தனது அதிரடியால் தெறிக்கவிட்டு ஒருசில ஓவர்களில் ஆட்டத்தில் திருப்புமுனையையும் போக்கையே மாற்றக்கூடிய வீரரும் ஆவார். 

நடந்து முடிந்த ஐபிஎல் சீசன் ஹர்திக் பாண்டியாவிற்கு அபாரமானதாக இருந்தது. 15 இன்னிங்ஸ்களில் ஆடி 402 ரன்களை குவித்தார் ஹர்திக் பாண்டியா. ஸ்டிரைக் ரேட் 190க்கும் மேல். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே அசத்தும் திறமை வாய்ந்த ஹர்திக் பாண்டியா, களத்தில் தனது 200% அர்ப்பணிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர்.

காஃபி வித் கரன் நிகழ்ச்சி சர்ச்சைக்கு பிறகு வேற லெவலில் வெகுண்டெழுந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

இந்நிலையில், இந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களிலேயே தீராத வேட்கையில் இருப்பது ஹர்திக் பாண்டியா தான் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் தலைசிறந்த ஃபீல்டருமான ஜாண்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். பாண்டியா குறித்து பேசிய ஜாண்டி ரோட்ஸ், சர்ச்சையில் சிக்கி தடை பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, அதிலிருந்து எப்படி மீண்டெழ போகிறார் என்பது எனக்கு பெரிய சந்தேகமாக இருந்தது. ஆனால் பாண்டியா ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி அபாரமாக ஆடினார். ஒரு வீரராக பாண்டியா நிறைய மேம்பட்டுள்ளார். தற்போது ஒரு ஃபினிஷராகி உள்ளதன் மூலம் ஆல்ரவுண்டருக்கான அனைத்து பாக்ஸ்களையும் டிக் செய்துவிட்டதாக ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.