கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் மாத மத்தியிலிருந்து எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் நடக்காத நிலையில், 4 மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. 

பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு, அதன்படி நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி நடந்த சவுத்தாம்ப்டனில் இருந்து 2வது டெஸ்ட் நடந்த ஓல்ட் டிராஃபோர்டுக்கு நேரடியாக செல்லாமல், கொரோனா நெறிமுறைகளை மீறி, தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, பின்னர் ஓல்ட் டிராஃபோர்டுக்கு வந்தார் ஆர்ச்சர். 

ஆர்ச்சர் கொரோனா நெறிமுறைகளை மீறியது, அவருக்கு மட்டுமல்லாது, அவரது சக வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்களுக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல். எனவே கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆர்ச்சர், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டு, 5 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு 2 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர், மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இணைந்துள்ளார். 

ஆர்ச்சர் கொரோனா விதிமுறையை மீறி நடந்ததற்கு, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆர்ச்சரும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கோரினார். 

இந்நிலையில், மீடியாவின் கவனம் முழுவதும் அவர் மீது திரும்பி, அவரை ஃபோக்கஸ் செய்யப்படுவதால் அதிருப்தியடைந்த ஆர்ச்சர், தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோஃப்ரா ஆர்ச்சர், முதல் போட்டி நடந்த சவுத்தாம்ப்டனில் இருந்து நேரடியாக ஓல்ட் டிராஃபோர்டுக்கு, ஒரு குறிப்பிட்ட வழியில் தான் பயணித்திருக்க வேண்டும். ஆனால் அந்தவழியில் என் வீடு இருப்பதால், வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பினேன். நான் செய்தது தவறுதான். அனைத்து வீரர்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால், நான் செய்தது தவறு. அதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உட்பட அனைவரிடமும் மன்னிப்பு கேட்டேன். எனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் செலுத்திவிட்டேன். 

 தனிமையில் இருந்துவிட்டு மீண்டும் எனது அறைக்கு திரும்பிய நான், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எனது அறையை விட்டு வெளியே வந்ததும், என்னை ஏராளமான கேமராக்கள் படம்பிடித்தன. அது எனக்கு ஒருமாதிரியாக இருந்தது. மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான். நான் செய்தது தவறுதானே தவிர, குற்றமல்ல என்று தயவுசெய்து என்னை விடுங்கள் என்கிற ரீதியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.