இங்கிலாந்து அணி இலங்கைக்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் நேற்று(14ம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இலங்கை அணியில் ஒருவர் கூட சரியாக ஆடவில்லை. சொந்த மண்ணில் படுமட்டமாக பேட்டிங் ஆடினர். அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கேப்டன் கருணரத்னே ஆடாததால் சண்டிமால் கேப்டனாக செயல்பட்டார். திரிமன்னே, குசால் பெரேரா, சண்டிமால், மேத்யூஸ், குசால் மெண்டிஸ், டிக்வெல்லா ஆகிய அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இலங்கை அணி வெறும் 135  ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் டோமினிக் பெஸ் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் க்ராவ்லி மற்றும் டோமினிக் சிப்ளி ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜானி பேர்ஸ்டோவும் கேப்டன் ஜோ ரூட்டும் இணைந்து இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். பேர்ஸ்டோ 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ஜோ ரூட், நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பான இன்னிங்ஸை ஆடி சதமடித்தார்.

அவருடன் இணைந்து நன்றாக ஆடிய டேனியல் லாரன்ஸ் 73 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் களத்தில் நங்கூரமிட்ட ஜோ ரூட், 150 ரன்களை கடந்தார். லாரன்ஸின் விக்கெட்டுக்கு பிறகு, ரூட்டுடன் பட்லர் ஜோடி சேர்ந்து ஆடிவந்த நிலையில், மழையால் 2ம் நாள் ஆட்டத்தின் கடைசி கொஞ்ச நேரம் பாதிக்கப்பட்டது. இரட்டை சதத்தை நோக்கி ஆடிவரும் ஜோ ரூட், 168 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இங்கிலாந்து அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் அடித்துள்ளது.

 சமகாலத்தின் சிறந்த வீரர்களான கோலி, வில்லியம்சன், ஸ்மித் ஆகியோருக்கு நிகராக, அவர்களில் ஒருவராக பார்க்கப்படும் ஜோ ரூட், அண்மைக்காலமாக சரியாக ஆடாததால், சமகாலத்தின் தலைசிறந்த 4 பேட்ஸ்மேன்களில் தனது இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக பாபர் அசாமிடம் இழந்துவந்த நிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியை தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இரட்டை சதத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஜோ ரூட்டுக்கு இந்த நேரத்தில் தேவையான மிக முக்கியமான இன்னிங்ஸ் இது.