Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND இவரோட கொட்டத்தை அடக்க ஆளு இல்லாம போச்சே..! அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இஷாந்த் சர்மா

இஷாந்த் சர்மா அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி துவண்டுபோயிருந்த இந்திய அணிக்கு புத்துயிரூட்டியுள்ளார்.
 

joe root playing towards double century against india in second test ishant sharma takes wickets in 2 consecutive balls
Author
London, First Published Aug 14, 2021, 9:52 PM IST

இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அமைத்து கொடுத்த அடித்தளம் மற்றும் அதன்பின்னர் கேஎல் ராகுல் ஆடிய பெரிய இன்னிங்ஸ் ஆகியவற்றின் விளைவாக 364 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த ராகுல் 129 ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் 83 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். கோலி 42 ரன்களும், ரிஷப் பண்ட் 37 ரன்களும், ஜடேஜா 40 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் சிப்ளி(11) மற்றும் ஹசீப் ஹமீத்(0) ஆகிய இருவரையும் 15வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் சிராஜ். 23 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணிக்கு ரோரி பர்ன்ஸும் ஜோ ரூட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

 3வது விக்கெட்டுக்கு ரூட்டும் பர்ன்ஸும் இணைந்து 85 ரன்களை சேர்த்தனர். முதல் நாள் ஆட்டம் முடிவதற்கு ஒருசில ஓவர்களுக்கு முன் ரோரி பர்ன்ஸை 49 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஷமி. ரூட்டும் பேர்ஸ்டோவும் களத்தில் இருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிந்தது.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனை ரூட்டும் பேர்ஸ்டோவும் தொடர்ந்தனர். அரைசதம் அடித்த ரூட், தனது ஃபார்மை தொடர, கண்டிப்பாக ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பேர்ஸ்டோ, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். ரூட்டும் பேர்ஸ்டோவும் பொறுப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்து தெளிவாக பேட்டிங் ஆட, முதல் செசன் முழுவதுமே அந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய பவுலர்களால் பிரிக்க முடியவில்லை.

2வது செசனில் ரூட் சதமடிக்க, கடுமையான போராட்டத்துக்கு பிறகு பேர்ஸ்டோவை 57 ரன்களுக்கு வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தார் சிராஜ். அதன்பின்னர் களத்திற்கு வந்த பட்லர் 23 ரன்களில் இஷாந்த் சர்மாவின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய ரூட்டுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்து, அவர் பங்கிற்கு அவரும் ரூட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். ரூட்டும் மொயின் அலியும் சேர்ந்து  6வது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அடித்த ஸ்கோரை இங்கிலாந்து நெருங்கிக்கொண்டிருக்க, இந்திய அணிக்கு விக்கெட் வீழ்த்த வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், மொயின் அலியை 27 ரன்னில் வீழ்த்திய இஷாந்த் சர்மா, அதற்கடுத்த பந்திலேயே சாம் கரனை டக் அவுட்டாக்கி அனுப்பினார்.

இதையடுத்து இங்கிலாந்து அணி 341 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மற்ற வீரர்கள் ஆட்டமிழந்தாலும், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 150 ரன்களை கடந்து இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார். முதல் டெஸ்ட்டில் ஒரு சதமடித்த ஜோ ரூட், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடி சதமடித்ததுடன், இரட்டை சதத்தை நோக்கி ஆடிவருகிறார். இவரை வீழ்த்துவதுதான் இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலாக  உள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios