33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது ஏன் என ஜவகல் ஸ்ரீநாத் விளக்கமளித்துள்ளார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் ஜவகல் ஸ்ரீநாத். 1991ம் ஆண்டிலிருந்து 2003ம் ஆண்டுவரை இந்திய அணிக்காக ஆடிய ஸ்ரீநாத், 67 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 236 விக்கெட்டுகளையும் 229 ஒருநாள் போட்டிகளில் ஆடி 315 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

2003ல் தென்னாப்பிரிக்காவில் நடந்த உலக கோப்பையுடன் ஸ்ரீநாத் ஓய்வு பெற்றார். அந்த உலக கோப்பை தொடரில் 11 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் ஓய்வும் பெற்றார். பொதுவாக ஃபாஸ்ட் பவுலர்கள், பேட்ஸ்மேன்களை போல 37-38 வயது வரை ஆடமாட்டார்கள். ஒருசிலர் மட்டுமே 38 வயதுவரை ஆடுவார்கள். ஆனால் ஸ்ரீநாத் வெறும் 33 வயதிலேயே ஓய்வு பெற்றார். 

இதுகுறித்து பேசிய ஸ்ரீநாத், என்னுடைய கைகளும் முழங்காலும் வலுவிழந்தது. அந்த நேரத்தில், ஜாகீர் கானும் ஆஷிஸ் நெஹ்ராவும்  நான் ஆடும்போது, அவர்கள் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். கபில் தேவும் மனோஜ் பிரபாகரும் ஆடிய காலத்தில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. நானும் அந்த கட்டத்தை கடந்துதான் வந்தேன். எனக்கு 33 வயதான நிலையில், இந்திய ஆடுகளங்களில் பந்துவீச முடியாமல் திணறினேன். இன்னும் ஓராண்டு ஆடியிருக்கலாம். ஆனால் எனது முழங்கால் ஒத்துழைக்கவில்லை என்று ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.