இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 242 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து, முதல் 10 ஓவரிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டனர். 

இங்கிலாந்து - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 241 ரன்கள் அடித்தது. 

21 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கை அணியை, அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்து நல்ல ஸ்கோரை எட்டவைத்தார் தனஞ்செயா டி சில்வா. அபாரமாக ஆடிய ஆடிய சில்வா 91 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பின்வரிசையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஹசரங்கா 26 ரன்களும், ஷனாகா 47 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 5 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 242 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஜேசன் ராய் ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடி பவுண்டரிகளாக விளாச, ஆரம்பத்தில் நிதானமாக ஆடி நிலைத்து நின்ற பேர்ஸ்டோ, 9வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசி மிரட்டினார்.

ராய் மற்றும் பேர்ஸ்டோவின் அதிரடியான தொடக்கத்தால் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை அடித்துள்ள இங்கிலாந்து அணி, 242 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து வெற்றி பெற்றுவிடும்.