இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலரும், சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமாக திகழ்பவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஃபாஸ்ட் பவுலர்கள் ஃபிட்னெஸ் சிக்கல் காரணமாக பொதுவாக நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடமாட்டார்கள். அரிதினும் அரிதாக ஒருசிலர் மட்டுமே 15 ஆண்டுகளுக்கு மேல் ஆடியுள்ளனர். 

அந்தவகையில், ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்த பட்டியலில் முதன்மையானவர். 2002ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 18 ஆண்டுகளாக ஆடிவருகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட ஆண்டர்சன், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். அதனால் தான், அவரால் ஃபிட்னெஸூடன் இன்னும் கிரிக்கெட் ஆடமுடிகிறது. அனுபவம் வாய்ந்த ஆண்டர்சன், இதுவரை 151 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 

37 வயதான ஆண்டர்சன், இந்த வயதிலும் அபாரமாக பந்துவீசி, உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக திகழும் கோலி, ஸ்மித், வில்லியம்சன் போன்றோரை அச்சுறுத்திவருகிறார். சச்சின் - பாண்டிங் சிறந்து விளங்கிய முந்தைய தலைமுறையிலிருந்து இன்றைய தலைமுறை வீரர்கள் வரை பல சிறந்த வீரர்களுக்கு பந்துவீசியிருக்கிறார் ஆண்டர்சன். 

அருமையான ஃபாஸ்ட் பவுலரான ஆண்டர்சன், தனது கெரியரில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ரிக்கி பாண்டிங், மேத்யூ ஹைடன், பிரயன் லாரா, தோனி, விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஹாஷிம் ஆம்லா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியிருக்கிறார். 

இந்நிலையில், தனது கெரியரில் தான் பந்துவீசியதில் யாருக்கு பந்துவீசுவது மிகச்சவாலாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஆண்டர்சன், ரிக்கி பாண்டிங் தான் பந்துவீச மிகக்கடினமான பேட்ஸ்மேன். ஷார்ட் பிட்ச் பந்து வீசினால், புல் ஷாட் ஆடுவார். ஃபுல் லெந்த்தில் வீசினால் டிரைவ் ஆடுவார். எனவே அவருக்கு எங்குதான் வீசுவது என்ற குழப்பம் வரும். பாண்டிங்கை போலவே ஹாஷிம் ஆம்லாவிற்கு பந்துவீசுவதும் கடினம். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு வீசுவது ரொம்ப கடினம் என்று ஆண்டர்சன் தெரிவித்தார். 


 
ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாண்டிங் திகழ்கிறார். ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளிலும் 375 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் 27,483 ரன்களை குவித்து, அதிகமான ரன்களை குவித்த மூன்றாவது வீரராக திகழ்வது குறிப்பிடத்தக்கது.