சையத் முஷ்டாக் அலியில் முதல் போட்டியில் ஜார்க்கண்ட்டையும், 2வது போட்டியில் அசாமையும், 3வது போட்டியில் ஒடிசாவையும் வீழ்த்தி தொடர் வெற்றிகளை பெற்ற தமிழ்நாடு அணி, இன்று ஹைதராபாத்தை எதிர்கொண்டு ஆடியது. கொல்கத்தாவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 152  ரன்கள் அடித்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பிரக்னய் ரெட்டி 30 ரன்களும், சந்தீப் 41 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி 20 ஓவரில் வெறும் 152  ரன்கள் மட்டுமே அடித்தது.

153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 8 ரன்களிலும் அருண் கார்த்திக் பதினாறு ரன்களிலும் ஆட்டமிழக்க, பாபா அபரஜித்தும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் ஜெகதீசன் அரைசதம் அடித்தார்.

4வது விக்கெட்டுக்கு ஜெகதீசனுடன் ஜோடி சேர்ந்த கேப்டனும் சீனியர் வீரருமான தினேஷ் கார்த்திக், தனது அனுபவமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து இருவரும் இணைந்து இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். 51 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5  சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்த ஜெகதீசன், கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். தினேஷ் கார்த்திக் 40 ரன்கள் அடித்தார். இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பெற்றுள்ளது. இந்த தொடர் ஆரம்பித்து இதுவரை ஒரு தோல்வியை கூட தமிழ்நாடு அணி அடையவில்லை.