லங்கா பிரீமியர் லீக் 2வது சீசனின் ஃபைனலில் காலே கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை வென்றது ஜாஃப்னா கிங்ஸ் அணி. 

இலங்கையில் நடத்தப்படும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இந்த ஆண்டு நடந்தது. முதல் சீசனின் ஃபைனலில் மோதிய காலே கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜாஃப்னா கிங்ஸ் அணிகளே, இந்த சீசனின் ஃபைனலிலும் மோதின.

ஹம்பண்டோட்டாவில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது. திசாரா பெரேரா தலைமையிலான ஜாஃப்னா கிங்ஸ் அணியும், பானுகா ராஜபக்சா தலைமையிலான காலே கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்தன. 2வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஜாஃப்னா கிங்ஸ் அணியும், கடந்த சீசனில் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுத்து பழிதீர்க்கும் முனைப்பில் காலே கிளாடியேட்டர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ஜாஃப்னா கிங்ஸ் அணியின் கேப்டன் திசாரா பெரேரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஜாஃப்னா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்த குர்பாஸ், 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து தனது பணியை செவ்வனே முடித்துவிட்டு பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் அவிஷ்கா ஃபெர்னாண்டோவுடன் ஜோடி சேர்ந்த டாம் கோலரும் அடித்து ஆடினார். இந்த சீசன் முழுவதுமே சிறப்பாக ஆடிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ, இறுதி போட்டியிலும் அரைசதம் அடித்தார். 41 பந்தில் 63 ரன்கள் அடித்து அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷோயப் மாலிக் 11 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 23 ரன்களும், கேப்டன் திசாரா பெரேரா 9 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 17 ரன்களும் அடித்தனர். டாம் கோலர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஜாஃப்னா கிங்ஸ் அணியில் பேட்டிங் ஆடிய அனைத்து பேட்ஸ்மேன்களுமே அதிரடியாக பேட்டிங் ஆடியதால் 20 ஓவரில் 201 ரன்களை குவித்த ஜாஃப்னா அணி, 202 ரன்கள் என்ற கடின இலக்கை காலே கிளாடியேட்டர்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து 202 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய காலே கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகா அதிரடியாக ஆடி 19 பந்தில் அரைசதம் அடித்தார். 21 பந்தில் 54 ரன்களை குவித்து அவர் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸும் சிறப்பாக பேட்டிங் ஆடி 28 பந்தில் 39 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் பென் டன்க்(0), முகமது ஹஃபீஸ் (10), கேப்டன் பானுகா ராஜபக்சா (14), சமீத் படேல் (22) என யாருமே சரியாக ஆடாததால் காலே அணி 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே அடித்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஃபைனலில் காலே அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஜாஃப்னா கிங்ஸ் அணி 2வது முறையாக கோப்பையை வென்றது. லங்கா பிரீமியர் லீக்கில் 2 சீசன்கள் நடந்துள்ள நிலையில், 2 முறையுமே ஜாஃப்னா கிங்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளது.