முகமது அசாருதீன், முகமது கைஃப் வரிசையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த ஃபீல்டர் ரவீந்திர ஜடேஜா. ஒரு நல்ல ஃபீல்டரின் பங்களிப்பு, ஒரு பேட்ஸ்மேன் அடிக்கும் 50 ரன்களுக்கு சமம்.

தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் மிரட்டலான ஃபீல்டர்கள் என்றால் ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் தான். தங்களது அசாத்தியமான ஃபீல்டிங்கின் மூலம் ஆட்டத்தில் திருப்புமுனைகளை ஏற்படுத்தக்கூடியவர்கள். 

அப்படியான ஒரு திருப்புமுனையை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஜடேஜா ஏற்படுத்தி கொடுத்தார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறந்த பங்களிப்பை அளிக்கக்கூடியவர். ஒன்றில் சரியாக செயல்படாவிட்டாலும் மற்ற இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுவிடுவார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு தொடக்க ஜோடி 83 ரன்களை சேர்க்க, அதன்பிறகு மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் ஆகியோர் ஆட்டமிழந்தாலும் ஹேண்ட்ஸ்கம்ப் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக ஆடிவந்தனர். 

ஹேண்ட்ஸ்கம்ப் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தார். 48 ரன்கள் அடித்து அரைசதத்தை நெருங்கிய அவர், ஜடேஜாவின் அபாரமான ரன் அவுட்டில் வெளியேறினார். நீண்டநேரம் விக்கெட் விழாமல் இருந்த நிலையில் ஹேண்ட்ஸ்கம்பின்  விக்கெட் இந்திய அணிக்கு உத்வேகத்தை அளித்து மீண்டும் ஆட்டத்துக்குள் அழைத்து சென்றது. அந்த வகையில் அந்த விக்கெட் ரொம்ப முக்கியமானது. 

ஹேண்ட்ஸ்கம்ப் ஆஃப் திசையில் அடித்துவிட்டு ஓட, பாயிண்ட் திசையில் நின்ற ஜடேஜா, பந்தை பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். ஜடேஜாவின் மிரட்டலான ரன் அவுட்டில் 59 பந்துகளில் 48 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து டெத் ஓவர்களை பும்ராவும் ஷமியும் அபாரமாக வீசினர். கடைசி ஓவரில் விஜய் சங்கர் அருமையாக வீசி அணியை வெற்றி பெற செய்தார். 

ஆட்டத்தில் எந்த நேரத்திலும் தனது சிறந்த ஃபீல்டிங்கின் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தும் திறன் வாய்ந்த ஜடேஜா போன்ற வீரர்கள் உலக கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் இடம்பெறுவது அவசியம்.