இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது. முதலில் பேட்டிங் ஆடி 502 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை 431 ரன்களுக்கு சுருட்டியது. 

முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்ட இந்திய அணிக்கு, எல்கர் பெரும் தலைவலியாக இருந்தார். அபாரமாக ஆடிய அவர் 160 ரன்களை குவித்து இந்திய அணியின் திட்டங்களையும் நம்பிக்கையையும் தகர்த்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கேப்டன் டுப்ளெசிஸ் மற்றும் டி காக் ஆகியோர் சிறப்பாக ஆடினார். ஆனால் மையமாக எல்கர் தான் இருந்தார். 

இரண்டாம் நாள் முடிவில் ஆடுகளத்தின் தன்மை மாறியதால் பந்து நன்றாக திரும்பியது. நன்றாக டர்ன் ஆன பிட்ச்சில், அஷ்வின் மற்றும் ஜடேஜா என்ற தரமான ஸ்பின்னர்களை சாமர்த்தியமாக எதிர்கொண்டு அபாரமாக ஆடி ரன்களை குவித்தார் எல்கர். அந்த அணி 431 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தின் இறுதியில் தென்னாப்பிரிக்காவை இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க வைத்துவிட வேண்டும் என்பதால் அதற்குள்ளாக முடிந்தவரை ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்று காலை, அந்த அணியின் எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளை எடுத்துவிட்டு பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, 323 ரன்களை குவித்தது. 

முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோஹித் சர்மா இந்த இன்னிங்ஸிலும் அதிரடியாக ஆடி சதமடித்தார். புஜாரா அபாரமாக ஆடி 81 ரன்களை குவித்தார். அதன்பின்னர் ஜடேஜா, கோலி, ரஹானே ஆகியோர் தங்கள் பங்கிற்கு அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 

நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் 13 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்க அணி 395 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிவருகிறது. நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்த இலக்கை அடிப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை. 

எனவே விக்கெட்டுகளை இழந்துவிடாமல் நின்று டிரா செய்யும் முனைப்பில் இறங்கியது. மார்க்ரமும் எல்கரும் களத்திற்கு வந்தனர். முதல் ஓவரையே அஷ்வின் தான் வீசினார். அஷ்வினும் ஜடேஜாவும் மாறி மாறி வீசினர். இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் பெரும் தலைவலியாக இருந்த எல்கரை வெறும் 2 ரன்னில் நான்காவது ஓவரிலேயே வீழ்த்தினார் ஜடேஜா. இதையடுத்து மார்க்ரமுடன் டி ப்ருய்ன் ஜோடி சேர்ந்து இன்றைய ஆட்டத்தை முடித்தனர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் அடித்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி கடைசி நாளான நாளை முழுவதும் 9 விக்கெட்டுகளை இழந்துவிடாமல் மேனேஜ் செய்தால்தான் போட்டியை டிரா செய்ய முடியும். 

இன்றைய நாள் ஆட்டம் இந்தியாவினுடையது. 67 ஓவரில் 323 ரன்களை குவித்ததோடு, இன்றைய நாளின் கடைசி நேரத்தில் முக்கியமான விக்கெட்டான எல்கரின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளது.