விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே அபாரமாக ஆடினர். ரோஹித் சர்மா 176 ரன்களையும் இரட்டை சதமடித்த மயன்க் அகர்வால் 215 ரன்களையும் குவித்தனர். இவர்கள் இருவரின் அபாரமான பேட்டிங்கால் 502 ரன்களை குவித்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

நேற்றைய ஆட்டத்தில் 20 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவரை சமாளித்து ஆடிமுடிக்க முடியாமல் 3 விக்கெட்டுகளை இழந்தது. மார்க்ரம், டி ப்ருய்ன் மற்றும் டேன் பீட் ஆகிய மூவரும் நேற்று ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் எல்கருடன் பவுமா ஜோடி சேர்ந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பவுமாவின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் எல்கருடன் இணைந்து டுப்ளெசிஸ் நன்றாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இருவரும் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்தனர். அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, எல்கர் சதமடித்தார். 

டுப்ளெசிஸின் விக்கெட்டுக்கு பிறகு எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக், டுப்ளெசிஸ் விட்டுச்சென்ற பணியை அவரைவிட செவ்வனே செய்தார். டி காக் ஒருமுனையில் அதிரடியாக ஆட, எல்கர் 150 ரன்களை கடந்து இந்திய அணியை அச்சுறுத்தினார். தென்னாப்பிரிக்க அணி சரிவிலிருந்து மீண்டதுடன் எல்கரும் டி காக்கும் அபாரமாக ஆடியது பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. 

இந்திய அணியின் ஆதிக்கம் கையை மீறி போய்க்கொண்டிருந்த நிலையில், இந்திய அணிக்கு தலைவலியாக இருந்த எல்கரை 160 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். நல்ல வேளையாக அந்த கேட்ச்சை தவறவிட்டு விடாமல் கரெக்ட்டாக பிடித்தார் புஜாரா. 

எல்கர் அவுட்டானாலும் டி காக் என்ற மற்றொரு தலைவலி உள்ளது. அபாரமாக ஆடிய டி காக், சதமடித்து தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். அவருடன் முத்துசாமி ஜோடி சேர்ந்துள்ளார்.