21ம் நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிகு வீரர் ஜடேஜா தான் என்று விஸ்டன் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்றுவிதமான போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துவகையிலும் சிறப்பான பங்களிப்பை செய்யக்கூடியவர் ஜடேஜா. 

இடது கை ஆஃப் ஸ்பின்னரான ஜடேஜா, பின் வரிசையில் பேட்டிங் இறங்கி, முக்கியமான பல கட்டத்தில் அதிரடியாகவும் நிலைத்து நின்று ஆட வேண்டிய தருணத்தில் நிதானமாகவும் பேட்டிங் ஆடி அணியை காப்பாற்றக்கூடியவர். ஃபீல்டிங்கில் அவர் தான் இந்தியாவின் பெஸ்ட் என்று சொன்னால் மிகையாகாது. மைதானத்தின் எந்த பகுதியிலிருந்து துல்லியமாக ஸ்டம்பில் அடிக்கக்கூடிய திறன் பெற்றவர்.

2009ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமான ஜடேஜா, 2012ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் ஆடிவருகிறார். இந்திய அணிக்காக 49 டெஸ்ட், 165 ஒருநாள் மற்றும் 49 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜடேஜா. 

ஜடேஜா 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1869 ரன்களையும் 213 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். துணைக்கண்டத்தில் ஆடும்போது, பிரதான டெஸ்ட் ஸ்பின்னராக அஷ்வின் எடுக்கப்பட்டாலும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஜடேஜாவே பிரதான ஸ்பின்னராக பயன்படுத்தப்படுகிறார். 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஜடேஜா திகழ்ந்துவருகிறார். இந்நிலையில், விஸ்டன், கிரிக்விஸ் மூலம் பல கூறுகளின் அடிப்படையில் Most Valuable Player-க்கான ரேட்டிங் மதிப்பிடப்பட்டது. அதில், 21ம் நூற்றாண்டின் மதிப்புமிகு வீரர்கள் பட்டியலில் உலகளவில் முரளிதரன் முதலிடத்தையும் ஜடேஜா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 97.3 புள்ளிகளுடன், இந்தியாவின் மதிப்புமிகு வீரராக ஜடேஜா திகழ்கிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் பவுலிங் சராசரி 24.62. இது சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னை விட சிறந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் பேட்டிங் சராசரி 35.26. இது ஷேன் வாட்சனின் பேட்டிங் சராசரியை விட அதிகம். அந்தளவிற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு, ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் ஜடேஜா சிறந்தவராக திகழ்கிறார்.

21ம் நூற்றாண்டில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணன், ஹர்பஜன் சிங், தோனி, கோலி, ரோஹித் சர்மா என பல சிறந்த வீரர்கள் ஆடினாலும், இந்த நூற்றாண்டில் இந்தியாவின் மதிப்புமிகு வீரர் என்ற பெருமைக்கு ஜடேஜா சொந்தக்காரர் ஆகியுள்ளார்.