விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றால் 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோஹித் சர்மா, சதமடித்து அசத்தினார். அதேபோல மயன்க் அகர்வாலும் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்தார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஸ்பின்னிற்கே சாதகமாக இருந்தது. அதை நன்கு பயன்படுத்தி அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் செய்ய முக்கிய காரணமாக திகழ்ந்தார் அஷ்வின். 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதை நன்கு உணர்ந்து அடித்து ஆடிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தார். ரோஹித்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் புஜாரா ஆடியதுதான் வியப்பான சம்பவம். முதல் 50-60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். அதன்பின்னர் கோலி, ரஹானே, ஜடேஜா ஆகியோரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

இரண்டாவது இன்னிங்ஸை 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி, 395 ரன்களை தென்னாப்பிரிக்காவிற்கு இலக்காக நிர்ணயித்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த எல்கரை ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் ஜடேஜா. அதன்பின்னர் டி ப்ருய்னை அஷ்வின் வீழ்த்த, பவுமா, டுப்ளெசிஸ் மற்றும் டி காக்கை ஷமி வீழ்த்தினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய மார்க்ரமை ஜடேஜா வீழ்த்தினார். பின்னர் அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரையும் ஜடேஜா வீழ்த்தினார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். இதையடுத்து கடைசி 2 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்த இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த போட்டியில் ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, அஷ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோர் சிறப்பாக ஆடினர். இந்நிலையில், இந்த போட்டி குறித்து டுவீட் செய்த சேவாக், ரோஹித் சர்மாவிற்கு இது மிகச்சிறந்த ஒரு போட்டியாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்ற ரோஹித்தின் கனவு பலித்துவிட்டது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது அருமையான ஒரு வெற்றி. மயன்க் அகர்வால், ஷமி, அஷ்வின், புஜாரா ஆகியோரின் பங்களிப்பும் அளப்பரியது என்று சேவாக் டுவீட் செய்திருந்தார். 

இந்த போட்டியில் மொத்தமாக 70 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிறப்பான பங்களிப்பு செய்திருந்த ஜடேஜாவின் பெயரை சேவாக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். அவர் வேண்டுமென்றே ஜடேஜாவின் பெயரை தவிர்த்தாரா அல்லது மறந்தவாக்கில் விடுபட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் ஜடேஜாவின் பெயரை தவிர்த்துவிட்ட சேவாக்கை, ஜடேஜாவின் ரசிகர்கள் விடுவதாயில்லை. 

சேவாக்கின் டுவீட்டிற்கு கீழே, சேவாக் உங்கள் வீட்டு டிவியில் ஜடேஜாவின் ஆட்டம் தெரியவில்லையா..? அவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் செய்த பங்களிப்பை நீங்கள் பார்த்த டிவி காட்டவில்லையா? அல்லது அந்த சமயத்தில் நீங்கள் தூங்கிவிட்டீர்களா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.