விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக மயன்க் அகர்வால் 215 ரன்களையும் ரோஹித் சர்மா 176 ரன்களையும் குவித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் 4 விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. ஆனால் அதன்பின்னர் எல்கரும் டுப்ளெசிஸும் இணைந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். அரைசதம் அடித்த டுப்ளெசிஸ் 55 ரன்களில் ஆட்டமிழக்க, எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். டுப்ளெசிஸ் விக்கெட்டுக்கு பிறகு எல்கருடன் ஜோடி சேர்ந்த டி காக்கும் சிறப்பாக ஆடினார். 

150 ரன்களை கடந்த எல்கரை 160 ரன்களில் ஜடேஜா வீழ்த்தினார். இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவரது விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஜடேஜா. இது ஜடேஜாவின் 200வது டெஸ்ட் விக்கெட். 44வது போட்டியில் தனது 200வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ஜடேஜா. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவிரைவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை பவுலர் என்ற சாதனையை படைத்தார். 

இதற்கு முன்னதாக இலங்கையின் ரங்கனா ஹெராத் 47 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதே, ஒரு இடது கை பவுலரின் விரைவான 200 விக்கெட் சாதனையாக இருந்தது. அதை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் ஜடேஜா. 

அதேபோல மிக விரைவில் 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். 39 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின் முதலிடத்தில் உள்ளார். 

ஜடேஜா எல்கரின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த பின்னர் டிகாக் மற்றும் ஃபிளாண்டர் ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்தினார்.